ஃபேஸ்புக் முடக்கம்… கோடிக் கணக்கில் சரிவை சந்தித்த மார்க் சக்கர்பெர்க்!
- IndiaGlitz, [Tuesday,October 05 2021]
வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தி நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இந்நிறுவனத்தின் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய 3 பிரபல சமூக ஊடகங்களும் முடங்கின. கிட்டத்தட்ட 7 மணிநேரம் இந்த ஆப்கள் எதுவுமே வேலை செய்யாமல் பயனாளிகள் உலகம் முழுவதும் திண்டாடும் நிலைமை ஏற்பட்டது.
இதனால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயல் தலைவர் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வீழ்ச்சியினால் அவர் உலகத் தரவரிசையில் பில் கேட்ஸுக்கும் கீழாக 5 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் சேவை ஒருசில மணிநேரங்கள் முடங்கியது. இந்தக் கோளாறை அந்த நிறுவனம் விரைந்து சரிசெய்ததால் பெரிய அளவிற்கு சரிவை சந்திக்கவில்லை. ஆனால் தற்போது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கின் சேவை கிட்டத்தட்ட 7 மணிநேரம் முடங்கி இருக்கிறது. இதனால் 7 பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 52 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் கூறப்படுகிறது.
மேலும் 140 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்டிருந்த மார்க் சக்கர்பெர்க் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதியில் இருந்து 19 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இழப்பீட்டை சந்தித்து தற்போது 120.9 பில்லியன் டாலர் அளவிற்கு சொத்து மதிப்பை வைத்துள்ளார். இதனால் உலகத் தரவரிசையில் 5ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும சில மணிநேரச் சேவை முடக்கத்தைத் தவிர ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதாவது இன்ஸ்டாகிராம் பல இளம்பெண்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அதனால் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகவும் அந்தப் பத்திரிக்கை கட்டுரை வெளியிட்டு உள்ளது.
அதேபோல ஃபேஸ்புக் பற்றிய எதிர்மறை கட்டுரைகளையும் அந்த ஜர்னல் வெளியிட்டு இருக்கிறது. இந்தத் தாக்கத்தினால்தான் ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.