இந்தியாவில் கொகைன் கொடுத்து மிரட்டினார்கள்… பிரபல வீரர் கூறிய திடுக்கிடும் தகவல்!
- IndiaGlitz, [Thursday,January 27 2022] Sports News
ஜிம்பாபே அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி வீரருமான பிரண்டன் டெய்லர் தன்னை இந்தியாவில் உள்ள தொழிலதிபர் ஒருவர் ஸ்பாட் பிக்சிங் செய்யச்சொல்லி மிரட்டினார் என்றும் இதற்காக எனக்குப் போதைப்பொருள் கொடுத்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டினார் என்றும் கூறியுள்ள தகவல் ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜிம்பாபே அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் டெய்லர் கடந்த 2011-2021 வரை 71 போட்டிகளுக்கு கேப்டனாக பதவி வகித்துள்ளார். சிறந்த பேட்ஸ்மேனாகவும் அவர் இருந்துவந்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை அடித்த ஜிம்பாபே வீரர்களின் பட்டியலில் 2 ஆவது இடத்தில் இருக்கும்இவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து தற்போது நான் செய்த ஒரு தவறுக்காக எனக்கு பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட ஐசிசி தடை விதிக்கும் எனும் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். காரணம் ஜிம்பாபே அணியில் இனி நான் இடம்பெறுவேனா என நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் கடந்த அக்டோபர் 2019 இல் இந்திய தொழில் அதிபர் ஒருவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் ஜிம்பாபேவில் டி20 கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான ஸ்பான்ஸர்ஷிர் குறித்து விவாதிப்பதற்காக என்னை இந்தியாவிற்கு அழைத்திருந்தார்.
இந்த அழைப்பிற்கு ரூ.15 லட்சம் கொடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார். இந்த அழைப்பில் முழுமையாக எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் நான் அங்கு சென்றிருந்தேன். பின்னர் அந்த தொழிலதிபர் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கடைசி நாள் இரவில் எனக்கு கொகைன் கொடுத்தார்கள். நானும் முட்டாள்தனமாக அதை உட்கொண்டேன். இந்த நிகழ்வை வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு அந்த தொழிலதிபரின் ஆட்கள் மறுநாள் காலையில் ஹோட்டலுக்கு வந்து என்னை மிரட்டினார்கள்.
மேலும் கிரிக்கெட் மைதானத்தில் ஸ்பாட் பிக்சிங் செய்ய வேண்டும். அதற்காக 15 ஆயிரம் டாலர்கள் முன்பணம் வழங்கப்படும். பின்னர் 20 ஆயிரம் கொடுக்கப்படும். ஒருவேளை இதற்கு மறுப்பு தெரிவித்தால் போதைப்பொருள் உட்கொண்ட வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டினார்கள். எனக்கு வேறு வழிதெரியவில்லை. நான் இந்தியாவில் இருந்து உயிர் தப்பி வரவேண்டும்.
அதனால் அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிவிட்டேன். பின்னர் அந்தத் தொழிலதிபர் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். நான் கொடுக்கவில்லை. அதேபோல நான் எந்த ஸ்பாட் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை. என்னுடைய குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதி ஐசிசியிடம் புகார் அளிக்கவில்லை. ஒருவழியாக 4 மாதங்கள் கழித்து புகார் தெரிவித்தேன். இந்தக் காலம் தாமதமானதுதான். ஆனால் என்னுடைய குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி இவ்வாறு செய்தேன் என்று தெரிவித்து உள்ளார்.
நான் தாமதித்து புகார் அளித்ததால் ஐசிசி எனக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இதுபோன்ற புகார்களை விரைந்து தெரியப்படுத்த வேண்டும். பல வீரர்களுக்கு என கதையே முன்உதாரணமாக இருக்கிறது என வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.
பிரண்டன் டெய்லர் சந்தித்துள்ள இந்த விவகாரம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து ஐசிசி இவருக்கு தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் பல முன்னணி வீரர்கள் பிரண்டன் டெய்லருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். பிரண்டன் நடந்ததைப் பற்றி ஒப்புக்கொண்டுள்ளார். பாதுகாப்புக்காக தெரிந்தே அவர் செய்த தவறை மன்னிக்க வேண்டும். அதேபோல வீரர்களுக்கு பாதுகாப்பு அவசியம் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.