கம்பேக் கொடுக்கிறாரா யுவராஜ் சிங்? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராகவும் எதிரணி வீரர்களுக்கு களத்தில் சிம்ம சொப்பனமாகவும் இருந்து அதிரடி காட்டியவர் யுவராஜ் சிங். இவர் தன்னுடைய தனித்திறமையால் பலமுறை இந்திய அணியை வெற்றிப்பெற செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

தற்போது 39 வயதான யுவராஜ் சிங் ரசிகர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவாரா? அல்லது டி20 லீக் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுவாரா? என்பது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்திய அணிக்காக கடந்த 2003 ஆம் ஆண்டு விளையாடத் துவங்கிய யுவராஜ் சிங் இதுவரை 40 டெஸ்ட் தொடர் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஒருநாள் போட்டியில் 14 சதத்தை விளாசிய இவர் சர்வதேசப் போட்டிகளில் மட்டும் 11 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். அதேநேரத்தில் 148 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளின்போது இந்திய அணியின் ஹீரோவாக இருந்து செயல்பட்டார். அதேநேரத்தில் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செய்தியும் வெளியாகியது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கடும் வருத்தத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பெற்று மீண்டுவந்த யுவராஜ் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

ஆனால் பழைய ஃபார்ம் இல்லாத காரணத்தால் அதிகளவு வாய்ப்பு மறுக்கப்பட்ட யுவராஜ், லீக் போட்டிகளில் விளையாடி வந்தார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் விளையாடி இருந்தார். இதையடுத்து கடந்த 2019 ஜுன் மாதம் அனைத்துவிதப் போட்டிகளில் இருந்தும் விலகிவிடுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட்டிற்கு கம்பேக் கொடுக்க இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். இயைதடுத்து ரசிகர்கள் பலரும் கடும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.