இந்தியாவின் லெஜண்ட் கிரிக்கெட்டர்கள் திடீர் சந்திப்பு… வைரலாகும் வீடியோ!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் இருவரும் சந்தித்துக் கொண்ட வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் கடும் வைரலாகி வருகிறது.

இந்தியக் கிரிக்கெட் அணியில் மறக்கமுடியாத வீரர்களாக வலம்வந்த தோனி, யுவராஜ் சிங் இருவரும் இணைந்து டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஆரம்பித்து உலகக்கோப்பை போட்டி வரை ஒன்றாக விளையாடி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர். மேலும் இருவரும் நண்பர்களாக வலம் வந்த நிலையில் இந்திய ரசிகர்கள் இவர்களை லெஜண்ட் அடையாளத்தோடு பாராட்டி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2007 இல் டி20 உலகக்கோப்பை, 2011இல் 50 ஓவர் உலகக்கோப்பை என இருப்போட்டிகளிலும் தோனி மற்றும் யுவராஜ்சிங் இருவரும் இணைந்து விளையாடினர். பின்னர் 2011 உலகக்கோப்பைக்கு பிறகு யுவராஜ்சிங்கிற்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது இருவருமே சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றிருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யுவராஜ்சிங் இரண்டாவது இன்னிங்ஸிற்கு தயாராகி வருவதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து மீண்டும் யுவராஜ்சிங் இந்தியக் கிரிக்கெட் அணிக்குள் நுழைவாரா என்று ரசிகர்கள் ஆர்வத்தை வெளியிட்டு வந்தனர். ஆனால் வெளிநாட்டில் நடைபெறும் லீக் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடிய இந்திய வீரர்களுக்கு மீண்டும் இந்திய அணியில் இடமில்லை என்ற விதிமுறையும் இருந்துவருகிறது. இதனால் யுவராஜ்சிங் இந்திய அணிக்குள் நுழையமுடியாது என்று கருத்துக்கணிப்புகள் கூறப்படுகின்றன.

இதைத்தொடர்ந்து யுவராஜ்சிங் மற்றும் தோனி இருவரும் சந்தித்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்தச் சந்திப்புக்கான காரணம் எதுவும் தெரியாத நிலையில் யுவராஜ் மற்றும் தோனி இருவரும் ஒன்றாக இணைந்து தொழில் துவங்கவுள்ளனரா? அல்லது விளம்பர படமா? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.