மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு குவியும் ஆதரவு..!

  • IndiaGlitz, [Tuesday,September 12 2023]

இசைப்புயல் ஏஆர் ரகுமானின் ’மறக்குமா நெஞ்சம்’ என்ற நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி காரணமாக ஏஆர் ரகுமான் மீது சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏஆர் ரகுமானுக்கு திரையுலகினர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். குறிப்பாக யுவன் சங்கர் ராஜா, கார்த்தி உள்ளிட்டோர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்

இது குறித்து யுவன் சங்கர் ராஜா கூறியதாவது: ஒரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்துவது என்பது மிகவும் சிக்கலான ஒரு வேலை, அதில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, போக்குவரத்தை கையாள்வது என ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஒருங்கிணைப்பு குளறுபடிகள் காரணமாக, துரதிர்ஷ்டவசமான வகையில் அதிக கூட்ட நெரிசல் உள்ளிட்ட எதிர்பாராத பிரச்சினைகள் பெரிய இசை நிகழ்ச்சிகளின் போது நடக்கின்றன. நோக்கங்கள் நல்லதாக இருந்தாலும், சில விஷயங்கள் தவறாகி விடுகின்றன. இதனால் எங்கள் இசைக்கு அர்த்தம் கொடுக்கும் மக்களாகிய எங்கள் ரசிகர்களுக்கு கடுமையான அழுத்தம் ஏற்படுகிறது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தயாரிப்பாளர்களும் இந்த சம்பவத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம். இசையமைப்பாளர்களாக, நாங்கள் மேடையில் இருக்கும் போது எங்கள் ரசிகர்கள் பாதுகாப்பாக இருப்பதையும், அனைத்தும் சுமூகமாக நடப்பதையும் உறுதி செய்ய இந்த தயாரிப்பாளர்கள் மேல் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது உண்மையில் மனதை கனக்கச் செய்கிறது. திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களில் தீவிரமாக பங்கெடுக்க நான் உட்பட அனைத்து கலைஞர்களுக்கும் இந்த சம்பவம் எச்சரிக்கை விடுக்கிறது. ஒரு சக இசையமைப்பாளராக இந்த சூழலில், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை கருத்தில் கொண்டு ஏ.ஆர்.ரஹ்மானுடன் நான் துணை நிற்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தி இதுகுறித்து கூறிய போது, ‘ இசை நிகழ்ச்சிகள் நடந்தது துரதிர்ஷ்டமானது. இருப்பினும் எனக்கு தெரிந்தவரை ரகுமான் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பார். எனது குடும்பத்தினரும் அந்த இசை நிகழ்ச்சியில் பிரச்சனைகளுக்கு இடையே கலந்து கொண்டனர். இருப்பினும் ரகுமான் அவர்களுக்கு நான் துணையாக நிற்கிறேன். ரசிகர்களும் அவர் மீது அன்பை கிடைத்து வெறுப்பை ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த குளறுபடிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பு ஏற்பார்கள் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.