காமெடியில் முடிந்த யுவன்சங்கர் ராஜாவின் கார் திருட்டு விவகாரம்
- IndiaGlitz, [Wednesday,April 04 2018]
பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜாவின் விலைமதிப்புள்ள ஆடி கார் நேற்று திருடு போனது என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த திருட்டு குறித்து யுவன் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது இந்த விவகாரம் காமெடியில் முடிந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது
யுவன்ஷங்கரின் டிரைவர் வழக்கமான இடத்தில் காரை நிறுத்தாததாலும், அவரை போன் மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதாலும் கார் திருடு போனதாக சந்தேகம் அடைந்த யுவன் குடும்பத்தினர் உடனே போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகார் குறித்து விசாரணை செய்த போலீசார், டிரைவரின் செல்போனை டிராக் செய்தபோது, அந்த போன் யுவன் வீட்டு அருகில் இருப்பதாக தெரியவந்தது.
உடனே யுவனின் வீட்டிற்கு சென்று விசாரித்த போலீசார் பின்னர் திருடு போனதாக கூறப்பட்ட கார் அந்த அபார்ட்மெண்டின் தரைத்தளத்தில் நிறுத்தப்பட்டிருப்பதையும் கார் அருகே டிரைவர் தூங்கி கொண்டிருந்ததையும் கண்டுபிடித்தனர்.
பின்னர் டிரைவரிடம் நடத்திய விசாரணையில் வழக்கமான கார் நிறுத்தும் இடத்தில் இடம் இல்லாததால் தரைத்தளத்தில் நிறுத்திவிட்டு தூங்கிவிட்டதாகவும், தன்னுடைய செல்போனில் சார்ஜ் இல்லாததால் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து யுவன் தரப்பினர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்து கொண்டனர். யுவனின் ஆடி கார் திருட்டு விவகாரம் கடைசியில் காமெடியில் முடிந்ததை எண்ணி யுவன் குடும்பத்தினர் தற்போது தர்மசங்கடத்தில் உள்ளனர்.