நான் ஒரு பிறவி இசைக்கலைஞன். 20 வருடம் இசைப்பயண அனுபவம் குறித்து யுவன்ஷங்கர் ராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். அதுபோல இசைஞானியின் இசைவாரிசுகள் இசைத்துறையில் சாதனை செய்வது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. இருப்பினும் இசைஞானியின் இசை வாரீசான யுவன்ஷங்கர் ராஜா திரையுலகில் அடியெடுத்து வைத்து இன்றுடன் (27.02.2017) இருபது ஆண்டு காலம் நிறைவு பெறுகிறது என்பது ஒரு மிகப்பெரிய சாதனைதான். கடந்த 1997ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த 'அரவிந்தன்' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த யுவன்ஷங்கர் ராஜா தனது இருபது வருட இசைப்பயணத்தின் இந்த மகிழ்ச்சிகரமான நாளை எப்போதும் போல, எளிமையாக கொண்டாடினார்.
தனது இசைப்பயணம் குறித்து அவர் கூறியதாவது:
"நான் இப்போது இந்த நிலையில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் என்னுடைய ரசிகர்களின் அன்பும், இசை பிரியர்களின் ஆதரவும் தான். அவர்களுக்கு என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். இருபது வருடங்கள் நிறைவு பெற்றாலும், நேற்று தான் திரையுலகில் அடியெடுத்து வைத்திருப்பது போல நான் உணருகின்றேன். இந்த இருபது வருட காலத்தில் எனக்கு ஏற்பட்ட ஏற்றங்களும் இறக்கங்களும், என்னை எந்த விதத்திலும் பின்னடைய செய்யவில்லை. இந்த வருடங்களின் எண்ணிக்கையை நான் இசையமைத்த திரைப்படங்கள் மூலமாக தான் கணக்கிடப்பட முடியும். ஆனால் நான் ஒரு பிறவி இசை கலைஞன் என்பது இன்றும், என்றும், என்றென்றும் நீடித்து இருக்கும்.
இந்த தருணத்தில் என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் எல்லா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நட்சத்திரங்கள், ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகள் தெரிவித்து கொள்கின்றேன். இசை துறையில் நான் அதிக கவனம் செலுத்துவதற்கு மிக முக்கிய காரணம் என்னுடைய தந்தை தான். அவருக்கு நான் எப்போதும் கடமை பட்டிருக்கிறேன். இந்த இருபதாவது வருடத்தில் நான் 'கொலையுதிர் காலம்' திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்து இருப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். விரைவில் என்னுடைய அடுத்த படத்தை பற்றிய விவரங்களை நான் தெரிவிப்பேன்" இவ்வாறு யுவன்ஷங்கர் ராஜா உற்சாகமாக தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments