ஜி.வி.பிரகாஷ்-யுவன்ஷங்கர் கூட்டணியில் உருவான 'மாயக்காரி'

  • IndiaGlitz, [Wednesday,July 22 2015]

கோலிவுட் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் இன்றைய இளையதலைமுறை இசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், யுவன்ஷங்கர் ராஜா, அனிருத், விஜய் ஆண்டனி, இமான் ஆகியோர் ஒருவர் இசையமைக்கும் படங்களில் மற்றொருவர் பாடி வரும் டிரெண்ட் அதிகரித்து கொண்டு வருகிறது. இதில் இசையமைப்பாளர்களின் ஒற்றுமை வெளிப்படுவதால் அவர்களிடையே ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ், நடித்த 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தில் இடபெற்ற ஒரு பாடலை யுவன்ஷங்கர் பாடியுள்ளார். இந்த படத்தில் இடபெற்றுள்ள 'முத்தம் கொடுத்த மாயக்காரி' என்ற பாடலை சமீபத்தில் யுவன்ஷங்கர் ராஜா பாடி கொடுத்துள்ளார்.


ஜி.வி பிரகாஷ் மற்றும் மனிஷா யாதவ் இந்த பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த பாடலுக்கு யுவனின் குரல் பொருத்தமாக இருக்கும் என நாயகனும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கருதியதால், யுவனிடம் இந்த பாடலை பாடிக்கொடுக்குமாறு கேட்கப்பட்டதாகவும், அவரும் மகிழ்ச்சியுடன் இந்த பாடலை பாடியதாகவும் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், 'கயல்' ஆனந்தி, மனிஷா யாதவ், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஆர்யா, சிம்ரன், ப்ரியா ஆனந்த் மற்றும் யூகிசேது நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.