கைவிடப்பட்டாரா? காத்திருக்க வைக்கப்பட்டாரா? ரோஜாவின் நிலைதான் என்ன?
- IndiaGlitz, [Sunday,June 09 2019]
ஆந்திர மாநில தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவை நேற்று பதவியேற்றது. இந்தியாவிலேயே முதல்முறையாக ஐந்து துணை முதல்வர்கள் நேற்று ஆந்திராவில் பதவியேற்றனர். அதனையடுத்து 20 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.
இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவரான ரோஜாவின் பெயர் துணை முதல்வர் பட்டியலிலும் இல்லை, அமைச்சர்கள் பட்டியலிலும் இல்லை. இதனால் ரோஜா தரப்பினர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ரோஜாவுக்கு சபாநாயகர் பதவி தர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்ததாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் சபாநாயகர் பதவியை ரோஜா மறுத்துவிட்டதாகவும் அவரது தரப்பில் இருந்து கூறப்படுகிறது
இந்த நிலையில் ஆந்திர மாநில அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் 25 பேர்களுக்கும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு நிபந்தனையை விதித்துள்ளார். அது, அமைச்சர்களின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டு மட்டுமே. அடுத்த இரண்டரை ஆண்டில் முற்றிலும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்பதுதான். எனவே 2022ஆம் ஆண்டு அமையவுள்ள புதிய அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கு முக்கிய அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் அதுவரை அவர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆந்திர அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.