பப்ஜி மதன் மீது பாய்ந்த குண்டார்ஸ்......! இனி ஓராண்டுக்கு புழலில் கம்பி எண்ண வேண்டியதுதான்....!
- IndiaGlitz, [Tuesday,July 06 2021]
யுடியூபில் பப்ஜி விளையாட்டிற்காக ஆபாச வீடியோக்களை பதிவிட்ட மதன் மீது, ஆன்லைனில் 159 புகார்கள் வந்து குவிந்திருந்தன. இதைத்தொடர்ந்து மதனை கைது செய்ய சேலம் விரைந்த காவல் துறையினர், அங்கிருந்த அவரின் அப்பா மாணிக்கத்தை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மதன் தலைமறைவான நிலையில், அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்தனர்.
தருமபுாியில் உள்ள குண்டல்பட்டியில் தனியார் விடுதியில், கடந்த மாதம் 18-ஆம் தேதி தலைமறைவாகி இருந்த மதனை, இரவு நேரத்தில் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அந்த சமயம் காவலர்களின் காலில் விழுந்த மதன் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன், பெண்களையும், குழந்தைகளையும் சீரழித்து விட்டேன், என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியுள்ளான். லேப்டாப், சொகுசு கார்களை மதனிடம் இருந்து பறிமுதல் செய்த காவல்துறையினர், மதனை கைது செய்தனர். விசாரணையில் மதன் தடைசெய்த, ஒருசில கொரிய விளையாட்டுக்களையும் பதிவிறக்கம் செய்து விளையாடி வந்ததாக கூறியுள்ளான்.
குழந்தையின் நலன் கருதி, கிரித்திகாவிற்கு அண்மையில் ஜாமீன் வழங்கப்பட்டு, மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். யுடியூப் மூலமாக மாதம் 10 லட்சம் வரை மோசடி செய்து சம்பாரித்த தம்பதி, ஆடி கார் உள்ளிட்ட 3 உயர்ரக கார்கள், சென்னையில் 2 சொகுசு வீடுகள் வாங்கியுள்ளனர். இவர்களின் வங்கிக்கணக்கில் 4 கோடிக்கு அதிகமாக பணம் இருந்ததால், அதையும் காவல் துறையினர் முடக்கியுள்ளனர். கிரிப்டோ கரன்சி மூலமாகவும் மதன் பல தில்லாலங்கடி வேலைகள் செய்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து மதனின் இரண்டு யுடியூப் சேனல்களும் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதனின் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் அவன் ஒருவருடத்திற்கு சிறையில் இருந்து வெளிவர முடியாது, ஜாமீனும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது