காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சரமாரி கத்திக்குத்து… இளைஞரின் வெறிச்செயல்!

  • IndiaGlitz, [Tuesday,April 13 2021]

திண்டுக்கல் மாவட்டத்தில் முறைப் பெண்ணை திருமணம் செய்வதற்கு தடையாக இருந்தார் எனக் கூறி பால் வியாபாரம் செய்துவரும் ஒருவரை இளைஞர்கள் அடங்கிய கும்பல், கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தால் படுகாயம் அடைந்த பால் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது மேலும் வருத்ததை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல் மலைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (24). இவர் தனது முறைமாமன் கணேசன் என்பவரின் 17 வயது மகளை காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முறைமாமன் கணேசன், முனீஸ்வரனுக்கு பெண் தரமாட்டேன் என மறுப்புத் தெரிவித்து உள்ளார். காரணம் முனீஸ்வரன் ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

அதோடு இந்தச் சம்பவம் தொடர்பாக முறைமாமன் கணேசன் பால்வியாபாரம் செய்துவரும் முருகேசன் என்பவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். இதனால் முருகேசன் தன்னைத் தீர்த்துக் கட்ட முடிவுக்கட்டி விட்டார் என நினைத்துக் கொண்ட முனீஸ்வரன், தன்னைக் கொல்லுவதற்கு முன்பு அவரை கொன்றுவிட வேண்டும் எனத் தீர்மானித்துள்ளார்.

இதனால் தன்னுடைய நண்பர்களை துணைக்கு அழைத்துக் கொண்ட முனீஸ்வரன் நேற்று காலை முருகேசன் பால் வியாபாராத்திற்கு வரும்போது வழியிலேயே மடக்கிப் பிடித்து சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து 8 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.