சிறைக்கு அனுப்பிய நடிகை.. பழிவாங்க மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்த வாலிபர் கைது..!
- IndiaGlitz, [Saturday,January 20 2024]
பிரபல நடிகை ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் ஜாமீனில் வெளிவந்து அந்த நடிகையை பழி வாங்குவதற்காக அவருடைய மகளின் புகைப்படத்தையும் ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்ட நிலையில் தற்போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழில் ’கோமாளி’ ’தீரன் அதிகாரம் ஒன்று’ ’வாத்தி’ உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை பிரவீனா. இவர் தமிழ், மலையாள தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் யாரோ வெளியிடுவதாக கேரள சைபர் கிரைம் போலீசில் பிரவீணா புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் நெல்லையை சேர்ந்த 24 வயது பாக்யராஜ் என்ற வாலிபர் தான் இந்த குற்றத்தை செய்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் பாக்யராஜ் ஜாமீனில் வெளிவந்த நிலையில் அவர் தன்னை சிறைக்கு அனுப்பிய நடிகை பிரவீணாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவரது மகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து போலியாக உருவாக்கப்பட்ட சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரவீணா மீண்டும் கேரள சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க போலீசார் இதுகுறித்து விசாரணை செய்தபோது, ஜாமீனில் வெளிவந்த பாக்யராஜ் தான் மீண்டும் இந்த வேலையை செய்துள்ளார் என்று கண்டுபிடித்தனர்.
இதனை அடுத்து தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க தனிப்படை அமைத்த நிலையில் அவர் டெல்லியில் ரகசியமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி சென்ற தனிப்படை அவரை சுற்றி வளைத்து கைது செய்து மீண்டும் சிறைக்கு தள்ளியது.
தன்னை சிறைக்கு அனுப்பிய நடிகையை பழிவாங்க அவரது மகளையும் ஆபாசமாக மார்பிங் செய்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.