டேட்டிங் ஆப்பினால் வந்த வினை… ஒரே வாரத்தில் 16 லட்சத்தை இழந்த இளைஞர்!!!
- IndiaGlitz, [Wednesday,December 23 2020]
பெங்களூர் நகரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் டேட்டிங் ஆப் மூலம் நடந்த மோசடியில் ஒரே வாரத்தில் ரூ.16 லட்சத்தை இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு இந்த மாதத்தில் மட்டும் இதேபோன்று 5 வழக்குகள் சைபர் கிரைமில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கல்யாணம் ஆகாத சிங்கிள்ஸ் மத்தியில் தற்போது டேட்டிங் ஆப் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் பெங்களூர் நகரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் இந்த ஆப்பில் கால் செய்த ஒரு பெண்ணிடம் மாட்டி தனது பணத்தை இழந்து உள்ளார். அந்த இளைஞர் முதலில் டேட்டிங் ஆப் மூலம் ஒரு பெண்ணிடம் பேசி இருக்கிறார். அவர் பெயர் சுவேதா. அடுத்து அந்த இளைஞருக்கு நிகிதா எனும் பெண் வீடியோ கால் செய்து இருக்கிறார். அந்த காலின்போது இளைஞர் நிர்வாணமாக இருந்தவாறே பேசி இருக்கிறார். இந்தக் காட்சிகளை எல்லாம் தனது செல்போனில் பதிவு செய்து கொண்ட நிகிதா அதை வைத்து இளைஞரை மிரட்டத் தொடங்கி இருக்கிறார்.
ப்ரீத்தி அகர்வால் மற்றும் ஷெரின் எனும் இரண்டு பெண்கள் சேர்ந்து கொண்டு அந்த இளைஞருக்கு கால் செய்து இருக்கின்றனர். அதில், நாங்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்காவிட்டால் உன்னுடைய நிர்வாண வீடியோக்களை நெட்டில் விட்டு விடுவோம் என மிரட்டி இருக்கின்றனர். இதனால் பயந்து போன இளைஞர் டிசம்பர் 3 -13 ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளாக ரூ.16 லட்சத்தை ஆன்லைனில் டிரான்ஸ்ஃபர் செய்து உள்ளார். ஒரு கட்டத்தில் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்க இயலாத இளைஞர் போலீஸ் உதவியை நாடியுள்ளார்.
ஒரே வாரத்தில் 16 லட்சத்தை இழந்த வழக்கைத் தவிர கடந்த மாதத்தில் 21 வயதான இளைஞர் ஒருவருக்கும் இதேபோன்ற சம்பவம் நடந்து இருக்கிறது. மேலும் டிசம்பரின் தொடக்கத்தில் இருந்து இதுபோன்ற 5 வழக்குகள் பதிவானதாகக் கூறப்படும் நிலையில் 39 வயதான காவல் அதிகாரி ஒருவரும் இதேபோன்ற சம்பவத்தில் சிக்கி உள்ளார். இதனால் டேட்டிங் போன்ற ஆப்களில் மணிக்கணக்காக செலவிடம் இளசுகளே கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள் என்று காவல் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.