காளை மாட்டின் மீதேறி டிக்டாக் எடுக்க முயன்ற வாலிபர் பரிதாப பலி!
- IndiaGlitz, [Saturday,November 23 2019]
கோவை அருகே குட்டையில் இருந்த காளை மாட்டின் மீது ஏறி டிக்டாக் வீடியோ எடுக்க முயன்ற வாலிபர் ஒருவர் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள ராயர்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன், புவனேஸ்வரன், மாதவன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய நால்வரும் அவ்வப்போது டிக் டாக் வீடியோ எடுப்பதில் ஆர்வத்துடன் இருந்துள்ளனர்
இந்த நிலையில் விக்னேஸ்வரன் தான் வளர்த்து வரும் காளை மாட்டை, அருகில் இருந்த குட்டை ஒன்றுக்கு அழைத்துச் சென்று குட்டையில் காளை மாட்டின் மீது ஏறி டிக் டாக் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அவருடைய நண்பர்களும் அவரை வீடியோ எடுத்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் திடீரென காளை மாடு மிரண்டு விக்னேஸ்வரனை குட்டையின் ஆழமான பகுதியில் தூக்கி வீசியது. இதனால் நீச்சல் தெரியாத விக்னேஸ்வரன் குட்டையில் உள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரை காப்பாற்ற அவரது மூன்று நண்பர்களும் முயற்சித்த நிலையிலும் அவரை காப்பாற்ற முடியாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விக்னேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
ஆபத்தான இடங்களில் செல்பி மற்றும் டிக் டாக் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது கூறி வந்தாலும் அதன் விளைவைப் புரிந்து கொள்ளாமல் இளைஞர்கள் ஆபத்தான இடங்களில் வீடியோ டிக் டாக் வீடியோ எடுப்பதை தொடர்ந்து கொண்டே உள்ளனர். இதனை அடுத்து டிக்டாக்வீடியோ இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது