மீண்டும் எழுச்சி பெறும் தமிழ் இளைஞர்கள்.
- IndiaGlitz, [Wednesday,March 29 2017]
தமிழக மக்களின் கோரிக்கைகளுக்காக இனிமேல் அரசியல்வாதிகளை நம்பி பயனில்லை, மக்களே களத்தில் இறங்கினால்தான் காரியம் நடக்கும் என்பதை நிரூபித்த நிகழ்ச்சி சென்னை மெரீனா ஜல்லிக்கட்டு போராட்டம். உலகப்புகழ் பெற்ற தமிழ் இளைஞர்களின் இந்த எழுச்சி போராட்டத்தால் ஜல்லிக்கட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது. இல்லையெனில் இன்னும் பல வருடங்கள் இந்த பிரச்சனை நீண்டுகொண்டே இருந்திருக்கும்
இந்நிலையில் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள், தமிழகத்திற்கு தேவையான வறட்சி நிதி, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் போராட்டம் ஆகியவைகளுக்காக மீண்டும் தமிழ் இளைஞர்கள் எழுச்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதப்படுகிறது. இரட்டை இலை சிலை எந்த கோஷ்டிக்கு, ஆர்.கே. நகர் தொகுதியின் வெற்றி யாருக்கு? என்பதிலேயே தமிழக அரசியல்வாதிகள் குறியாக இருக்கின்றனர். தமிழக மக்களின் தேவைகளை, கோரிக்கைகளை கவனிக்க கூட அவர்களுக்கு நேரம் இல்லை. மேலும் மத்திய அரசும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்திற்கு மிக மிக குறைவான வறட்சி நிவாரணம் உள்ளிட்ட தொகையை வழங்கி வருகிறது. மாநில அரசும் மத்திய அரசிடம் போராடி பெறும் நிலையிலும் இல்லை
எனவே வேறு வழியின்றி ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து மீண்டும் தமிழ் இளைஞர்கள் தற்போது எழுச்சி அடைந்துள்ளனர். சென்னை மெரினாவில் மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு வருவதாகவும், விவசாயிகளுக்கு ஆதரவாக கூடுமாறு சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் மெரினாவில் நேற்று கூடிய மாணவர்கள் ஒருசிலர் கைது செய்யப்பட்டதாகவும், இன்றும் கூடிய 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் கடலில் இறங்கி போராடிய பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் மாணவர்கள் கூடுவதைத் தடுக்க மெரினாவின் காந்தி சிலையில் இருந்து விவேகானந்தர் இல்லம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த பாதுகாப்பு இளைஞர்களின் எழுச்சி முன் நிற்கமுடியாது என்று கூறியபடி மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து கூடி வருவதால் சென்னை மெரீனாவில் பதட்டமான நிலை காணப்பட்டு வருகிறது. இன்று மாலை முதல் இன்னும் அதிக இளைஞர்கள் மெரீனாவில் கூட வாய்ப்பு இருப்பதாக் கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பை முன்னிட்டு மெரினா கடற்கரையில் இருந்த கடைகள் நேற்று அகற்றப்பட்டன.
தமிழக அரசு சென்னை மெரீனாவில் பாதுகாப்பு படையை அதிகரித்து மாணவர்களின் போராட்டத்தை தடுக்க காட்டும் ஆர்வத்தை அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் காட்டினாலே போதும், இந்த போராட்டமும் தேவைப்பட்டிருக்காது, அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்துவிடும் என்பதே அனைவரின் கோரிக்கைகளாக உள்ளது.