33 வயதில் சீரியல் நடிகை திடீர் மரணம்.....! சோகத்தில் ரசிகர்கள்....!
- IndiaGlitz, [Tuesday,August 10 2021]
மூளைப்புற்றுநோயால் பாதிப்படைந்த நடிகை நடிகை சரண்யா சசி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து புகழ் பெற்றவர்தான் நடிகை சரண்யா சசி. இவருக்கு கடந்த 10 வருடங்களாகவே மூளை புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. இந்தநிலையில் சென்ற சில வாரங்களாகவே இவர் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார். இதனால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இவர், நேற்று சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு மலையாள திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
1988-ல் சென்னையில் பிறந்த சரண்யா, கேரளாவை பூர்வீமாக கொண்டவர். பள்ளிப்படிப்பை சென்னையிலும், கல்லூரிப்படிப்பை ஹைதராபாத்தில் படித்து முடித்தார். மலையாளத்தில் சூர்யோதயம் என்ற சீரியலிலும், “சாக்கோ ரந்தமன்” என்ற படத்திலும், தமிழில் “பச்சை என்கிற காத்து” என்ற திரைப்படம் மூலமும் நாயகியாக அறிமுகமானார். மந்தரகொடி, ஹரிசந்தனம், சீதா உள்ளிட்ட பிரபல சீரியல்களிலும், சோட்டா மும்பை, தாளப்பாவூ, பாம்பே போன்ற ஒருசில படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமாவில் பிசியாக வேலை பார்த்து வந்த சரண்யாவிற்கு திடீரென தொடர்ந்து தலைவலி ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை அலட்சியமாக நினைத்துக்கொண்ட சந்தியா, வெகு நாட்கள் கழித்து 2012-ல் மருத்துவ பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது அவருக்கு மூளைப்புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நோய் காரணமாக மருத்துவ செலவுகளுக்கு கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளார் சரண்யா. இவருக்கு திரைத்துறையினரும், நண்பர்களும் உதவி செய்து வந்துள்ளனர். இதற்குப்பிறகு சரண்யாவிற்கு 11 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரண்யாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாக, அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை முடித்த பின், அண்மையில் சில நாட்களுக்கு முன் வீடு திரும்பியுள்ளார். இதன்பின் சரண்யாவிற்கு ரத்தத்தில் சோடியத்தின் அளவு குறைந்துள்ளது. இதனால் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதில், மீண்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதில், சிகிச்சை பலனில்லாமல் நேற்று உயிரிழந்தார். இவருக்கும், பினுசேவியர் என்ற நபருக்கும் சென்ற 2014-ல் திருமணம் நடந்தது. ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.