யூடியூப் பார்த்து கொள்ளை அடிக்க முயற்சி: கொரோனாவால் வேலை இழந்தத வாலிபரால் பரபரப்பு
- IndiaGlitz, [Thursday,April 16 2020]
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது மேலும் 19 நாட்களுக்கு இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பசியும் பட்டினியுமாக இருக்கும் நிலையில் ஒரு சிலர் வறுமை காரணமாக திருட்டு மற்றும் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் கொரோனாவால் வேலை இழந்த வாலிபர் ஒருவர் யூடியூபில் பார்த்து ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமை அலுவலத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் கடந்த 12 ஆம் தேதி இரவு அங்கு பணம் எடுக்க வருவதுபோல் வந்த ஒரு வாலிபர், ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணம் திருட்டு முயற்சியில் ஈடுபட்டார். ஏடிஎம் முன் கதவை எளிதாக திறந்த அவரால் அதிலுள்ள லாக்கரை திறக்க முடியவில்லை. இதனை அடுத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்ததால் அதிலிருந்து அலாரம் திடீரென ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகளை வைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் தான் இந்த ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தனக்கு வேலை போய்விட்டதாகவும் இதனை அடுத்து வீட்டுச் செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎமை உடைத்து திருட முயற்சி செய்ததாகவும் கூறினார். மேலும் ஏடிஎம்மில் எப்படி கொள்ளையடிப்பது என்பதை யூடியூபில் பார்த்து கற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வாலிபரிடம் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்