காகிதங்களை வைத்து போர் தளவாடங்களை வடிவமைக்கும் இளைஞர்… கலைநயத்துக்கு குவியும் பாராட்டு!!!
- IndiaGlitz, [Monday,September 28 2020]
புதுக்கோட்டை வாலிபர் ஒருவர் வெறுமனே காகிதங்களை வைத்து போர் தளவாடங்கள் முதற்கொண்டு இந்தியப் பாதுகாப்புத் துறையில் உள்ள அத்தனைப் பொருட்களின் மாதிரியையும் வடிவமைத்து விடுகிறார். இவரது கலைநயத்துக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். பொதுவாக இப்படி வித்தியாசமான பொருட்களை உருவாக்க நினைப்பவர்கள் இந்தியக் கலாச்சாரம், மதம் சார்ந்த விஷயங்களில் நாட்டம் செலுத்துவது இயல்பு. ஆனால் இந்த இளைஞர் பாதுகாப்புத் துறை சார்ந்த இயந்திரங்களையும் போர்க் கப்பல்களையும் வடிவமைப்பதுதான் மற்றவர்களை ஈர்த்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் குறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஆனந்தராஜ் பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு சிறிய வயதில் இருந்தே பொறியியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக நாட்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தனியார் துறையில் வேலைப்பார்த்து வந்த இவர் கொரோனா தாக்கத்தால் வேலையை இழந்து இருக்கிறார். இதனால் வீட்டில் இருக்கும் நேரத்தில் காகிதங்களைக் கொண்டு ஹெலிகாப்டர், போர்க்கப்பல்கள், இராணுவத் தளவாடங்கள், மரக்கலன்கள் எனப் பல்வேறு பாதுகாப்புத்துறை சார்ந்த பொருட்களின் மாதிரிகளை வடிவமைத்து இருக்கிறார்.
இதுகுறித்து கருத்துக் கூறிய ஆனந்த்ராஜ் எனக்கு இராணுவத்தில் போர்க்கப்பல் உருவாக்கும் பணியில் சேர வேண்டும் என்பது கனவு. பொறியியல் துறையில் பட்டத்தை பெற்றுள்ளதால் அதற்காக என்னைத் தயார் செய்து கொண்டு வருகிறேன். தற்போது நான் வடிவமைக்கும் மாதிரிகள் எனக்கு நல்ல பயிற்சி கொடுப்பவையாக இருக்கிறது எனவும் தெரிவித்து இருக்கிறார். இவரது மாதிரிகள் பெரும்பாலும் 2-5 செ.மீ கொண்டதாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.