நிச்சயம் செய்த பெண்ணை கத்தியால் குத்தி, தற்கொலைக்கு முயன்ற தாய்மாமன்!
- IndiaGlitz, [Saturday,April 27 2019]
நிச்சயம் செய்த அக்கா மகளை கத்தியால் குத்திவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்ற வாலிபரால் காஞ்சிபுரம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே சுங்குவார்சத்திரம் என்ற பகுதியை சேர்ந்த முத்து என்பவருக்கும் அவருடைய அக்கா மகளுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ந்தது. தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸ் ஆக பணிபுரிந்து வரும் தனது அக்கா மகள், வேறொரு ஆணுடன் அடிக்கடி மொபைல் போனில் பேசியதால் முத்து சந்தேகம் அடைந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று அந்த பெண் பணிபுரியும் தனியார் மருத்துவமனைக்கு வந்த முத்து, அவரிடம் இதுகுறித்து வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை சரமாரியாக குத்தி, உடனே விஷம் கலந்த மதுவை குடித்து தற்கொலைக்கும் முயன்றார் முத்து. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக படுகாயம் அடைந்த நர்ஸையும் விஷம் குடித்து உயிருக்கு போராடி வந்த முத்துவையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.