தாலி, மெட்டியை கழட்டிவிட்டு நீட் தேர்வு எழுதிய புதுமணப்பெண்: நெல்லையில் பரபரப்பு
- IndiaGlitz, [Sunday,September 13 2020]
தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. கடும் சோதனைக்கு பின்னர் இன்று மதியம் 2 மணிக்கு மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர் என்பதும், இந்தியா முழுவதும் 16 லட்சம் பேரும் தமிழகத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர்களும் இந்த தேர்வை எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு மையத்திற்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் அவர்கள் என்னென்ன கொண்டு வரக்கூடாது என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டு வந்தன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மனைவி முத்துலட்சுமி என்பவர் நெல்லை மாவட்ட தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுதார். அவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து வந்த நிலையில் அவரது கழுத்திலிருந்த தாலி மற்றும் காலில் அணிந்திருந்த மெட்டியைக் கழட்டச் சொல்லி அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதனை அடுத்து தாலி மற்றும் மெட்டியை கழட்டி அவர் தனது கணவரிடம் கொடுத்து விட்டு நீட் தேர்வு மையத்துக்கு சோகத்துடன் சென்றார். புதுமணப்பெண் ஒருவர் நீட் தேர்வு எழுத வந்ததை அடுத்து அவரது கழுத்திலிருந்த தாலியை அதிகாரிகள் கழட்ட சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.