2020 நிலைமைக்கு காரணம் ஒரு ஸ்பூன் அளவுதான்… கொரோனா குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்!!!
- IndiaGlitz, [Thursday,November 19 2020]
2020- இந்த அளவிற்கு மோசமாக இருக்கும் என்று உலகத்தில் யாருமே நினைத்து பார்த்திருக்க மாட்டர்கள். கொரோனா வைரஸ் அந்த அளவிற்கு ஒட்டுமொத்த மனித வாழ்க்கையின் இயல்பையே மாற்றி விட்டது. உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 50 மில்லியனைக் கடந்த நிலையிலும் அதன் பரவலை இன்னும் கட்டுப்படுத்த முடியாத நிலைமை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஒட்டுமொத்த உலகத்திலும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் அளவு வெறும் 1 டீஸ்பூன் மட்டும்தான் என்று பிரபல கணித விஞ்ஞானி ஒருவர் கூறி இருக்கிறார். இந்தத் தகவல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
மட் பார்க்கர் எனும் கணித அறிஞர் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளின் உயிரணுக்களின் எண்ணிக்கையை வைத்து இதுவரை உலகத்தில் பரவி இருக்கும் கொரோனா வைரஸின் அளவு எவ்வளவு என்பதைக் கணித்து உள்ளார். ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தினால் அது 14 நாட்கள் வரையிலும் நீடிக்கும். அதேபோல ஒட்டுமொத்த உலகத்திலும் சராசரியாக ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்படுகிறது. அந்த ஸ்வாப்களில் இருந்து அளவிடப்படும் வைரஸ் சுமைகளின் அளவை அடிப்படையாகக் கொண்டு பார்க்கர் தனது கணக்கீட்டை உருவாக்கி உள்ளார்.
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட பார்க்கர், “உலகில் இப்போது இருக்கும் அனைத்து குழப்பங்களுக்கும் ஒரு டீஸ்பூன் மதிப்புள்ள இந்த வைரஸ்தான் காரணம்” என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் மில்லி அளவில் அது 8 மில்லிலிட்டராக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். கொரோனா வைரஸ் துகள் என்பது மிகவும் சிறியதாக இருக்கும், அதை கண்களால் பார்க்க முடியாது, ஆனால் உயிரணுக்களை அழித்துவிடும் ஆற்றல் கொண்டது என்பது நமக்கு தெரிந்ததுதான். ஆனால் இந்த வைரஸ் ஒரு மனித உயிரணுவின் (100 மைக்ரோமீட்டர்) அளவை விட 10 மில்லியன் மடங்கு அளவில் சிறியது என்பதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.