இனிமேல் பழைய நகைகளை விற்க முடியாதா..? மத்திய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு..!
- IndiaGlitz, [Tuesday,May 23 2023]
வீட்டில் வைத்திருக்கும் பழைய நகைகளுக்கு ஹால்மார்க் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஹால்மார்க் செய்யப்படாத பழைய நகைகளை மாற்றவோ விற்பனை செய்யவோ முடியாது என்றும் மத்திய அரசு புதிதாக நிபந்தனை விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிதாக நகைகள் வாங்கும் போது ஹால்மார்க் முத்திரை இட வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் நிபந்தனை விதித்தது என்பதும் இதையடுத்து அனைத்து நகைக்கடைக்காரர்கள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய நகைகளை தான் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புதிதாக வாங்கும் நகைகளுக்கு மட்டுமே ஹால்மார்க் கட்டாயம் என பெரும்பாலான பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அறிக்கையின்படி பழைய நகைகளை விற்பதற்கு, பழைய நகைகளை வேறு வடிவில் மாற்றுவதற்கும் ஹால்மார்க் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஹால்மார்க் இல்லாத பழைய தங்க நகைகள் வைத்திருக்கும் நபர்கள் அதை விற்பதற்கு முன்பு அல்லது புதிதாக வடிவமைப்பதற்கு முன்பு ஹால்மார்க் கட்டாயம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய நகைகளை ஹால்மார்க் செய்வதற்கு BIS பதிவு செய்யப்பட்ட நகை கடைக்காரரிடம் இருந்து பெறலாம் என்றும் ஹால்மார்க் பெறுவதற்கு ஒவ்வொரு நகைக்கு, 45 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய நகைகள் வைத்திருப்பவர்கள் எந்த தங்க நகை விற்பனையாளரிடம் சென்று தங்களது பழைய நகைகளை கொடுத்து ஹால்மார்க் முத்திரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய நகைகளில் பழைய ஹால்மார்க் இருந்தாலும் அந்த ஆபரணங்கள் செல்லுபடியாகும் என்றும் புதிய ஹால்மார்க் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வீட்டில் வைத்திருக்கும் பழைய நகைகளை நீங்கள் வெறுமனே பயன்படுத்துவதாக மட்டுமே இருந்தால் ஹால்மார்க் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அதை விற்க வேண்டும் அல்லது அதை உருக்கி வேறு விதமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தால் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.