தோல்வியிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம்.
Send us your feedback to audioarticles@vaarta.com
நாம் திட்டமிட்டப்படி பல நேரங்களில் எதுவும் சரியாக நடப்பதில்லை. அதனால் தோல்வியைத் தழுவும் பலரும் தங்களை நொந்து கொள்ளத் தொடங்கி விடுகின்றனர். தாங்கள் இப்படி இருப்பதற்குக் காரணம் தன்னிடம் திறமை இல்லை எனவும் நினைக்கின்றனர். 'எனக்கு மட்டும் எதுவும் சரியாக நடக்காது, அதிர்ஷ்டம் என்பதே எனக்கு இல்லை' எனப் புலம்பவும் செய்கின்றனர்.
சிலர் என்னுடைய கனவு அல்லது என்னுடைய நோக்கம் சரியில்லை எனவும் கருதுகின்றனர். அடிப்படையில் திறமை இல்லை என்பதோ, நோக்கம் சரியில்லை என்பதோ எல்லா நேரங்களிலும் சரியான காரணமாக இருப்பதில்லை. நமது திட்டமிடலை விட நாம் செய்கின்ற செயல், கால - இடச் சூழலைப் பொறுத்து அமைகிறது என்பதும் கவனிக்கத் தக்கது.
தோல்வி ஒரு வழிகாட்டி
சில நேரங்களில் தோல்வி, நீங்கள் இந்தத் துறையைத் (நமது செயல்) தேர்வு செய்யக் கூடாது என வழிகாட்டவும் செய்கிறது. தோல்வி ஒரு கருவியாக மாறி நமது தேர்வினைக் குறித்து மறுமதிப்பீடு செய்வதற்கும் உதவுகிறது.
தோல்வி 'நான் செய்தே தீரவேண்டும்' என்ற உத்வேகத்தையும் தருகிறது. 'என்னால் முடியாது என்றால் வேறு யார் செய்வார்கள்' என்று தன்னம்பிக்கையை அதிகப்படுத்தவும் தோல்வியால் முடிகிறது. வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் வெற்றியை விட தோல்வி அதிக உத்வேகத்தை அளிக்கக் கூடிய சக்தி கொண்டது. வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் அனுபவங்களைத் தோல்வி மிக எளிதாக வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்து விடுகிறது.
உளவியல் மருத்துவ ஆலோசனை
உளவியல் மருத்துவர்கள் ஒருவரது தோல்வி பிரச்சினையைக் குறித்து ஆலோசிக்கும்போது வெற்றி, தோல்வி என்ற மதிப்பீடுகளிலிருந்து ஒருபோதும் சிந்திப்பதில்லை. தோல்வி என்பது ஒரு அனுபவம் என்பதை விட அதனை நோயாளி எவ்வாறு எடுத்துக் கொள்கிறார் என்பதைப் பொறுத்துத்தான் மருத்துவர் தனது ஆலோசனைகளை வழங்குகிறார். ‘தோல்வி என்னைத் கொடுமைப்படுத்துகிறது’ என ஒரு நோயாளி கூறும்பொழுது, உளவியல் மருத்துவர் தோல்வி ஏற்படாமல் இருப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதில்லை.
தோல்வி மனப்பான்மையிலிருந்து நோயாளி வெளிவருவதற்கான வழிமுறைகளைத்தான் எடுத்துக் கூறுகிறார். நீங்கள் நினைத்த காரியங்கள் எப்போதும் நீங்கள் நினைத்த படியே நடக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறு என்பதை மருத்துவர் புரிய வைக்கிறார். தோல்வியைச் சந்தித்தால் சூடு கண்ட பூனை போல மீண்டும் அந்தச் செயலைச் செய்யாமல் இருப்பது மிகவும் தவறு என்பதை உணர வைக்கிறார்.
தோல்வியின்போது செய்ய வேண்டிய உளவியல் பயிற்சிகள்
1.மனதில் தோன்றும் எண்ணங்களையும் கவலைகளையும் தொடர்ந்து எழுத வேண்டும்- இவ்வாறு எழுதும் போது நம் மனதில் தோன்றும் சிந்தனைகளைக் குறித்து ஒரு புரிதல் ஏற்படுகிறது. தொடர்ந்து எழுதும்போது நமது எண்ணங்கள் எதிர்மறையாக இருப்பதனை புரிந்து கொள்ள முடியும். எதிர்மறை எழுத்துக்கள் சில நாட்களுக்குப் பின்னர் சலிப்படைந்து தனது புலம்பல்களைத் தானாகவே நிறுத்திக் கொள்ளவும் செய்யும். எழுத்துப் பயிற்சி மன ஆலோசனைகளில் தன்னைத் தானே ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு பேராற்றலாக விளங்குகிறது. பல நேரங்களில் எழுத்துப்பயிற்சினைத் தான் உளவியல் மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
2. அமைதியான முறையில் மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளல் – அடி வயிற்றிலிருந்து திரவ வடிவில் காற்று உள்ளேயிருந்து , மூக்கு வழியாக வெளியேறுவது போலவும் மீண்டும் மூச்சுக்காற்று மூக்கிலிருந்து அடி வயிறு வரைக்கும் உள்ளே செல்வது போலவும் கற்பனை செய்து மூச்சுப் பயிற்சியினைச் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மனதை ஒருமுகப்படுவதற்கு இந்தப் பயிற்சி மிகவும் உறுதுணை புரிகிறது எனலாம். பல நேரங்களில் தோல்வியை விட, தோல்வியைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதுதான் சிக்கலாகிவிடுகிறது. தோல்விச் சிந்தனையைத் தவிர்ப்பதற்கு மட்டுமல்லாது மனதில் ஓடும் எண்ணங்களைக் குறைக்கவும் இவ்வழிமுறை மிகவும் பயனுடையதாகும்.
ஆன்மீகம் மட்டுமல்லாது உளவியல் மருத்துவர்களும் மூச்சுப் பயிற்சியினைத்தான் அதிகளவில் பரிந்துரைக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
3. பயணம் செய்தல் – எப்போதும் மனிதர்கள் தங்களைச் சுற்றி ஒரு வட்டத்தினைப் போட்டுக் கொள்கின்றனர். சரி எது?, தவறு எது? எனச் சமூகம் கற்றுக் கொடுத்திருக்கும் கட்டுப்பாடுகளையும் மதிப்புக்களையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் ஏழ்மையான மனநிலையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஏழ்மையான மனநிலை புத்துணர்ச்சியைத் தடை செய்துவிடுகிறது. தன்னைத் தொடர்ந்து அனைவரும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்ற பய உணர்வினை ஏற்படுத்தி விடுகிறது.
மனிதர்களுக்கு எப்போதும் தெரிந்த விஷயங்கள்தான் தெரியும். தெரிந்த வாழ்க்கை முறையினைச் சுற்றியே நடமாடிக் கொண்டிருக்காமல் தெரியாத பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் பல இடங்களுக்குச் செல்லவும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மனித வாழ்க்கை மிகவும் எளிமையானது தான். எளிமையான வாழ்க்கையை சிக்கலான மனதுடன் அணுகுவதே தவறாகிவிடுகிறது. வாழ்க்கைப் பற்றிய பார்வையை மாற்றிக் கொண்டு விட்டால் தோல்வியும் இன்பமாகத் தெரியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments