இனிமே கொரோனா பரிசோதனையை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்: வரவிருக்கும் புது கருவி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒட்டுமொத்த மனித இனமும் கொரோனாவின் பிடியில் சிக்கிக்கொண்டு விடுபடுவதற்கு வழித்தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் அறிகுறி இருப்பவர்களுக்கே கொரோனா பரிசோதனையை விரைந்து செய்ய முடியாத நெருக்கடி நிலைமை ஒரு சில நாடுகளில் இருக்கத்தான் செய்கிறது. அப்படியான நெருக்கடியைப் போக்கும் வகையில் டெல்லி ஐஐடி நிறுவனம் ஒரு புதிய கருவியைக் கண்டுபிடித்து இருக்கிறது. இந்தக் கருவியைக் கொண்டு கொரோனா பரிசோதனையை மிக எளிதாக வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ளலாம் எனவும் ஐஐடி நிறுவனத்தின் பேராசிரியர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
பொதுவாக வீடுகளில் சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்வதற்கு குளுக்கோ மீட்டர்கள் வைத்திருப்போம். இதயத்தில் உள்ள ஆக்சிஜன் அளவைத் தெரிந்து கொள்ள ஆக்சி மீட்டர் வைத்திருப்போம். இனிமேல் கொரோனாவை தெரிந்து கொள்ள கொரோனா மீட்டர் போன்ற ஒரு கருவியை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்பதை உணர்ந்த ஐஐடி நிறுவனம் தற்போது புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறது. அவர்கள் கண்டுபிடித்து இருக்கும் புதிய கருவி பரிசோதனை கட்டம் முடிந்து சந்தைக்கு வருவதற்கு ஒரு மாதம் பிடிக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் வெற்றிகரமாக சோதனை முடிந்து இக்கருவி சந்தைக்கு வந்தால் எளிதாக கொரோனா நோய்த்தொற்று இருப்பதை கண்டுபிடிக்க முடியும். அதனால் எளிமையாக கொரோனாவைக் கட்டுப்படுத்தவும் முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் தற்போது வரை கொரோனா பரிசோதனையை செய்வதற்காக ஆர்.டி.பி.சி.ஆர் கருவி பயன்படுத்தப் படுகிறது. இக்கருவி கொரோனாவின் மரபணு பொருள் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமானால் பரிசோதனை மையங்களுக்குத் தான் செல்ல வேண்டும். ஆனால் டெல்லி ஐஐடி கண்டுபிடித்து இருக்கும் புதிய கருவியில் பரிசோதனை நிலையங்கள் இல்லாமலே வேலை எளிதாக முடிந்துவிடும் எனவும் கூறப்படுகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 95 மாதிரிகள் சேகரிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சேகரிக்கப் பட்ட ஒரு மாதிரியை பரிசோதனை செய்து முடிவு அறிவிப்பதற்கு குறைந்தது 6 மணி நேரங்களாவது பிடிக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இதுவரை இந்தியாவில் செய்யப்படும் சோதனையின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கிறது என்ற விமர்சனமும் தொடர்ந்து முன்வைக்கப் பட்டு வருகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையைப் பொறுத்தவரை இன்னும் அதிகபடியான கொரோனா பரிசோதனையை மேற்கொண்டால்தான் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த இயலும் எனவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இதுவரை 3 கோடியே 4 லட்சத்து ஆயிரத்து 644 கொரோனா மாதிரிகளை சேகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவு எனவும் கணக்கிடப்படுகிறது.
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) அமைப்பின் வழிகாட்டலின் படி எளிய கருவியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் டெல்லி ஐஐடி மற்றும் பூனேவின் தேசிய ரசாயன ஆய்வுக் கூடமும் இணைந்து செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்விற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் நிதி உதவியை வழங்கியிருக்கிறது. மைக்ரோபிளேட் என்சைம் இம்யூனோ அஸ்ஸே தொழில் நுட்பத்தைக் கொண்டு இப்புது கருவி உருவாக்கப் பட்டு இருக்கிறது. எலிசா சோதனையை மேற்கொள்ளும் வகையில் இந்தக் கருவி மிக எளிமையாக கொரோனா முடிவை தெரியப்படுத்தி விடும் எனவும் இதன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்புது கருவியைப் பயன்படுத்தி தனி நபர்கள் வீடுகளிலேயே பரிசோதனை செய்து கொள்ளலாம். தற்போது பழக்கத்தில் இருககும் பரிசோதனை கருவியை விட மிகவும் விலை மலிவாக உருவாக்கப்படும் எனவும் அதன் விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout