கலகலப்பான ரோம் காம் திரைப்படம் 'யோலோ': பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகும் “யோலோ” திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, இன்று இனிதே நடைபெற்றது.
வாழ்க்கை ஒரு முறை தான் அதை சரியாக வாழுங்கள் எனும் கருத்தில், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச் செய்யும் அழகான காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக ரோம் காம் ஜானரில் கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக, இப்படம் உருவாகிறது.
இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S.சாம் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தின் பூஜையில் இயக்குநர் அமீர், இயக்குநர் சமுத்திரகனி, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மகேஷ் செல்வராஜ் பேசியதாவது: தமிழ் திரையுலகின் முக்கிய திரைபிரபலங்கள் எங்களின் படத்துவக்க விழாவிற்கு வருகை தந்ததற்கு நன்றி. எனக்கும் திரைத்துறைக்கும் சம்பந்தமில்லை, திரைப்படங்களுக்கு அவார்ட் தரும் அகாடமி இடங்களில் ஜூரியாக இருந்துள்ளேன். அது தான் எனக்கும் சினிமாவுக்குமான சம்பந்தம். திரை பிரபலங்கள் அமீர் சார், ரமணா சார், டில்லி பாபு சார் எல்லோரும் நல்ல அறிவுரை தந்துள்ளனர். அவர்கள் தந்த ஆசீர்வாதத்திற்கு நன்றி. பத்திரிக்கை ஊடக நண்பர்கள் தரும் ஆதரவிற்கு நன்றி. இந்தக்கதை கேட்டேன், நார்மலாக ஹீரோ என்றாலே 40 வயதில் இருக்கிறார்கள் இதில் இளைஞன் தான் ஹீரோ அது எனக்குப் பிடித்திருந்தது. யாராவது ஒருவர் இந்த ரிஸ்க்கை எடுத்துத் தான் ஆக வேண்டும். நீங்கள் உங்கள் ஆதரவை தாருங்கள். யோலோ என்றால் வாழ்க்கை ஒரு முறை தான் அதைச் சரியாக வாழுங்கள் என்பது தான். இதைப் படம் வந்தவுடன் புரிந்து கொள்வீர்கள் நன்றி.
இயக்குநர் ரமணா பேசியதாவது: இங்கு உள்ள அனைவரும் நண்பர்கள். இந்த விழாவில் உள்ளவர்கள் நெருங்கிய நண்பர்கள், இது ஒரு அற்புதமான தருணம். வாழ்க்கை ஒரு முறை தான் வாழ முடியும். அதை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம். சக்ஸஸ் என்பது நீங்கள் உங்களைத் தயாராக வைத்துக்கொள்ளும் போது தான் வரும். சக்ஸஸ் என்பதே ரிஸ்க்குக்கு பின்னால் தான் இருக்கிறது. அதை நாம் எடுத்துதான் ஆக வேண்டும். ஒரு நல்ல இலக்கை இந்தக்குழு அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன் நன்றி.
சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது: தயாரிப்பாளர் தான் திறமையாளர்களுக்கு வாய்ப்பு தருவதாக இந்த தயாரிப்பைப் பற்றிச் சொன்னார், அது மிகவும் பிடித்திருந்தது. பூஜையில் நிறைய இளைஞர்கள் இருந்தார்கள், பல கனவுகளைச் சுமந்து இருக்கும் இந்த இளைஞர்களை அறிமுகப்படுத்துவது சினிமாவுக்கு நல்லது. இதை நாம் ரிஸ்க் என சொல்லக்கூடாது. சாட்டிலைட், ஓடிடி என பார்த்து, படம் செய்யும் போது தியேட்டர் ஆடியன்ஸ்க்கான படங்களைத் தவறவிட்டு விட்டோம். இன்று ரசிகர்களை திருப்திபடுத்தும் படத்தை வாங்கிக்கொள்ளும் பழக்கம், ஓடிடியில் வந்து விட்டது. இந்த நிலையில், நல்ல கதை, திறமையாளர்களை வைத்து ஒரு தொலைநோக்கு பார்வையோடு இந்த படத்தைச் செய்கிறார்கள். பெரிய கனவோடு செய்கிறார்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
நடிகர் லொள்ளு சபா ஜீவா பேசியதாவது: அமீர் சாருக்கு ரசிகன் நான் அவர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் சாம் என் நீண்ட கால நண்பர். கண்டிப்பாக ஒரு அழகான படத்தை தருவார். அவருக்கு என் வாழ்த்துக்கள். நான் மிமிக்ரி கற்றுக்கொள்ளும் போது எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது கோபி அண்ணன். அவர் என்னை வாழ்த்துவது மகிழ்ச்சி. நாயகன் தேவ், மற்றும் நாயகி தேவிகாவிற்கு வாழ்த்துக்கள். ரிஸ்க் எல்லாவற்றிலும் இருக்கிறது. நாம் சரியாக திட்டமிட்டால் வெற்றியடையலாம். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
நாயகி தேவிகா பேசியதாவது: இது என்னுடைய 4 வது தமிழ்ப்படம். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததை ஆசீர்வாதமாக நினைக்கிறேன். மிக நல்ல கதாப்பாத்திரம், எனக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
நாயகன் தேவ் பேசியதாவது: எங்களை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. இது தமிழில் எனக்கு மூன்றாவது படம், இரண்டு படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இயக்குநர் கதை சொன்ன போது, எனக்குப் பிடித்திருந்தது ஆனால் அவர் தயங்கினார், ஆனால் இரண்டு நாள் கழித்து நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்றார். நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கையை கண்டிப்பாக காப்பாற்றுவேன், படம் பற்றி அடுத்த விழாவில் இன்னும் நிறைய பகிர்ந்து கொள்கிறேன் நன்றி.
இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது: தயாரிப்பாளர் சக்தி இன்றைய தமிழ் சினிமா வியாபாரத்தை அழகாகச் சொன்னார். ஒவ்வொரு படமும் வியாபாரத்தை வைத்து தான் எடுக்கப்படுகிறது, அதைக் கண்டிப்பாக சாம் திறம்படக் கையாள்வார். கண்டிப்பாக வெற்றி படைப்பை தருவார். நேர்மை தான் வலிமை, வலிமை நிச்சயம் வெற்றி பெறும். சமுத்திரக்கனியிடமிருந்து வந்துள்ள சாம் தனித்துவமாக இருப்பார். தயாரிப்பாளர் மகேஷ், பள்ளி நடத்துபவர், சினிமா துறையிலும் சிறப்பாக விளங்குவார். படக்குழுவினர் இந்த படத்தின் மூலம் பெரிய வெற்றியை அடைய வாழ்த்துக்கள்.
இயக்குநர் சாம் பேசியதாவது: இந்த யுனிவர்ஸுக்கு நன்றி. ஃபிலிம் இன்ஸ்டிடியூட் முடித்த போது, முதலில் இயக்குநர் அமீர் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். பின்னர், சமுத்திரகனி சார் எனக்குத் துணை இயக்குநர் வாய்ப்பு தந்தார். கீழ்படிய கற்றுக்கொள் வெற்றி தானாய் வந்து சேரும் என்று அமீர் சார் அலுவலகத்தில் இருக்கும், அதைக் கற்றுக்கொண்டேன். சமுத்திரகனி சார் எனக்கு அண்ணன், அப்பா மாதிரி தான். ரமணா சார் எனக்கு ஒரு மெண்டார். சுப்ரமணிய சிவா சார் எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்த வாய்ப்பு எனக்கு மிக முக்கியமானது இந்த வாய்ப்பை தந்த மகேஷ் சாருக்கு நன்றி. இதனை சரியாகப் பயன்படுத்தி மிக அழகான படைப்பைத் தருவோம். ராம், என் 25 வருட நண்பர். அவருடையது தான் இந்தக்கதை. ஒரு டீமாக சேர்ந்து தான் இந்த படத்தை உருவாக்குகிறோம். உங்களுக்குப் பிடித்த மாதிரி ஒரு நல்ல எண்டர்டெயினர் படத்தைத் தருவோம் நன்றி.
இயக்குநர் அமீர் பேசியதாவது: ஒரு துவக்க விழா, இங்குள்ள பலருக்கு இது வழக்கமான விழா. ஆனால் சாமிற்கும் அவரது குழுவிற்கும் அவர்கள் வாழ்க்கையை துவக்கும் விழா. எனக்கு சேதுவைத் துவங்கிய நாள் தான் ஞாபகம் வருகிறது. 93ல் பாலாவின் அகிலன் பூஜை போட்ட அன்றே நின்று போய்விட்டது. தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோக்களிடமும் இந்த கதை போய் வந்தது. ஆனால் அது நடக்கவில்லை. பின் அது சேதுவாக மாறியது. இங்கு தான் பூஜை போட்டோம், பூஜை அன்று தொழிலாளர்கள் பிரச்சனையில் நின்று போனது. 7 வருடம் கழித்து தான் முடிந்தது. அப்புறமும் படம் வரவில்லை. என்றாவது ஒரு நாள் படம் வரும் என நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். பாலா தன் ஒட்டுமொத்த உழைப்பையும் தந்து, ஒரு தலைமுறையினருக்கு வாழ்வை வாய்ப்பை தரும் படைப்பை உருவாக்கி வைத்திருந்தார். ஒரு திரைத் தலைமுறையே அவர் மூலமாகத்தான் வந்தது. அந்த ஆலமரம் தான் பல புதிய கிளைகளைத் தந்துள்ளது. அப்படி ஒரு வாய்ப்பு தான் இந்தப்படமும். எந்தக்காலத்திலும் ஒருவன் தனியாக ஜெயிக்க முடியாது. அப்படித்தான் இன்று இங்கு மகேஷ் இருக்கிறார். சாம் செய்ய வேண்டியது ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டியது தான். இயக்குநர் சாமை என்னிடமிருந்து சமுத்திரகனி கூட்டிக்கொண்டு போய்விட்டான். நல்ல ஆட்களையெல்லாம் அவன் கூட்டிக்கொண்டு போய்விடுவான். சாமிற்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய வேண்டும். எங்கள் கிளையைப் பரப்ப சாம் வந்திருக்கிறான் என நம்புகிறேன். இந்தப்படம் பெரிய வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன் நன்றி.
இப்படத்தில் தேவ், தேவிகா நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், திலீப்குமார், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா ஃபியா, விக்னேஷ், லக்ஷ்மி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments