யோகி பாபு ஹீரோவாக நடித்த 'போட்' திரைப்படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,July 08 2024]

தளபதி விஜய் நடித்த ’புலி’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன் 9 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கியுள்ள ‘போட்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடித்த ’புலி’ திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சிம்புதேவன், யோகி பாபு நடித்த ‘போட்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான நிலையில் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. அந்த வகையில் சற்றுமுன் புதிய டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சிம்புதேவன், இந்த படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது ஜப்பான், சென்னையில் குண்டு போட்ட போது, ஒரு சிலர் ஒரு படகில் இந்தியாவில் இருந்து தப்பிச்செல்ல முடிவெடுத்து கடலில் செல்கின்றனர்.

அப்போது திடீரென படகில் ஓட்டை விழுகிறது, இதனால் ஏற்படும் பிரச்சனை, அவர்களுக்குள் ஏற்படும் அடிதடி, அதன் பின்னர் ஏற்படும் திருப்புமுனை ஆகியவைதான் இந்த படத்தின் கதை என்பது சற்று முன் வெளியாகியுள்ள வீடியோவில் இருந்து தெரிய வருகிறது

சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் யோகி பாபு, கௌரி கிஷான், எம் எஸ் பாஸ்கர், சின்ன ஜெயந்த், மதுமிதா, லீலா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.