கடும் உணவுப் பற்றாக்குறையில் தத்தளிக்கும் ஏமன்: 225 மில்லியன் டாலர் நிதி வழங்கும்  அமெரிக்கா!!!

  • IndiaGlitz, [Thursday,May 07 2020]

 

ஏமன் நாட்டில் நிலவும் கடுமையான உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக அமெரிக்க அரசு, 225 மில்லியன் டாலர் தொகையை அவசர உதவியாக வழங்க முன்வந்து இருக்கிறது. கொரோனா பரவல் நேரத்தில் அமெரிக்காவின் இந்த உதவித் தொகை, ஏமனுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் எனத் தற்போது பல அமைப்புகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன.

உலகில் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்படும் நாடுகளுள் ஒன்றாக ஏமன் இருந்து வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் ஐ.நா.வின் கீழ் இயங்கிவரும் உலக உணவுத் திட்டத்தின்கீழ் பல வழிகளில் இந்நாடு உதவிபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தின் நடுவில் WFP மூலம் வழங்கப்படும் உதவித்தொகை பாதியாக குறைக்கப்படும் என ஐ.நா. வின் WFP அறிக்கை வெளியிட்டு இருந்தது.

ஏமனில் பல மாகாணங்கள் ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின்கீழ் உதவி பெற்று வருகின்றன. இந்நாட்டிற்கு இதுவரை 41 வகையான உதவிகளை ஐ.நா. வின் WFP வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடியில் ஐ.நாவிற்கு வரும் நன்கொடைகள் மிகவும் குறைந்து காணப்படுகிறது. எனவே பணப் பற்றாக்குறையினால் ஏமனுக்கு வழங்கப்படும் உதவித் திட்டங்கள் 31 ஆக குறைக்கப்படும் என அறிக்கை வெளியாகியது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து ஏமன் நாட்டில் கடும் குழப்பங்கள் நிலவின.

அந்நாட்டில் உள்ள 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட அதாவது 24 மில்லியன் மக்கள் ஐ.நாவின் WFP உதவியைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர். மேலும், 10 விழுக்காட்டு மக்கள் அந்நாட்டில் கடுமையான பஞ்சத்தில் வாழ்ந்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு சுகாதார வசதிகள் குறைவு, பாதுகாப்பு குறைவு போன்ற பல நெருக்கடி நிலவும் அந்நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆக பதிவாகியிருக்கிறது. இறப்பு எண்ணிக்கை 6 ஆகவும் இருந்து வருகிறது. மருத்துவ உபகரணங்களில் பற்றாக்குறையினால் வெறுமனே 200 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு இருக்கின்றன.

இந்நிலையில் அமெரிக்கா 225 மில்லியன் டாலர் தொகைய அவசர நிதியாக அந்நாட்டிற்கு வழங்க இருக்கிறது. இத்தொகை அந்நாட்டில் WFP உதவியைப் பெறும் மாகாணங்களுக்கு வழங்கப்படும் என்று அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.