விபத்தில் பலியான யாஷிகாவின் தோழி யார்? முழு விபரங்கள்
- IndiaGlitz, [Monday,July 26 2021]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் சென்ற கார் விபத்துக்குள்ளானது என்பதும் இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது தெரிந்ததே. யாஷிகா தனது தோழியை நீண்ட நாள் கழித்து சந்தித்ததை அடுத்து அவருக்கு பார்ட்டி கொடுப்பதற்காக மகாபலிபுரம் சென்றதாகவும் பார்ட்டி முடித்துவிட்டு காரில் திரும்பும் வழியில் இந்த விபத்து நடந்ததாகவும் தெரிகிறது.
இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பதும், யாஷிகாவும் அவரது ஆண் நண்பர்களும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உயிரிழந்த யாஷிகாவின் தோழி பவானி குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. 28 வயதாகும் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவானி ஐதராபாத்தை சேர்ந்தவர் என்றும் இவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் என்றும் ஒரு வாரத்திற்கு முன் தான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தார் என்றும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சென்னை வந்து நண்பர்களை சந்தித்து உள்ளார் என்றும் தெரிகிறது.
நீண்ட நாட்களுக்கு பின் தோழி பவானியை சந்தித்த யாஷிகா மாமல்லபுரத்தில் பார்ட்டி வைக்க முடிவு செய்ததாகவும், மாமல்லபுர பார்ட்டியை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் தான் மகாபலிபுரம் அருகே விபத்து நடந்துள்ளது என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இரவு நேரத்தில் யாஷிகா மிக வேகமாக கார் ஓட்டியது போலவும் அதை பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் வீடியோ எடுத்த மாதிரி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விபத்து நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் இந்த வீடியோவை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காரில் சென்ற யாஷிகா உள்பட யாருமே சீட் பெல்ட் அணியவில்லை என்பதால்தான் உயிரிழப்பு மற்றும் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து வள்ளிச்செட்டி பவானியின் தந்தை கூறிய போது நாங்கள் தற்போது மகளை இழந்து உள்ளதால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளோம் என்றும் அடுத்து என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை என்றும் இருப்பினும் தங்களது மகள் மறைவால் இரங்கல் தெரிவித்து பலர் போன் செய்வது சற்று ஆறுதலாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.