9 வயதில் யோகா மாஸ்டரான சிறுவன்… கின்னஸில் இடம்பிடித்து சாதனை!
- IndiaGlitz, [Tuesday,February 22 2022]
இந்தியாவைச் சேர்ந்த சிறுவனுக்கு 9 வயதிலேயே யோகா பயிற்சியாளராக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்து பாராட்டுகளைக் குவித்துவருகிறார்.
யோகக் கலை என்பது இன்றைக்கு மட்டுமல்ல இந்தியாவில் கடந்த 2,000 ஆயிரம் காலம் தொட்டே இருந்துவரும் பழமையான ஒன்று. இதை அங்கீகரிக்கும் வகையில் தற்போது புதுபுது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சிறுவயதிலேயே யோகா மீது ஆர்வம் கொண்ட ரேயான்ஷ் சுரானி அதற்கான பயிற்சியில் தேர்ச்சிப் பெற்று இளம் வயதிலேயே பயிற்றுநராக ஆகியிருக்கிறார்.
மேலும் இளம் வயதிலேயே யோகா பயிற்றுநராக அங்கீகரிக்கப்பட்டு இருக்கும் ரேயான்ஷ் சுரானி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. துபாயில் வசித்துவரும் ரேயான்ஷ் சுரானியை அவரது பெற்றோர் 4 வயதில் ஒரு யோகா நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார்களாம். அப்போதே யோகா மீது ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு அதில் சாதனையும் படைத்திருக்கிறார்.
இதையடுத்து 9 வயதில் அனைத்து கலைகளிலும் தேர்ச்சிப்பெற்று இளம் வயது யோகா பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டு இருப்பது பலரது மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரை பூர்வீகமாகக் கொண்ட ரேயான்ஷ் சுரானி யோகா என்பது உடல்நிலை மற்றும் சுவாசம் பற்றியது மட்டுமல்ல, அதைவிட அதிகம் எனக் கூறி நம்மையும் ஆச்சர்யப்பட வைக்கிறார்.