யாஹூ சகாப்தம் முடிந்தது. 4.5 பில்லியனுக்கு வாங்கியது வெரிஜோன் நிறுவனம்
- IndiaGlitz, [Wednesday,June 14 2017]
கடந்த பத்து வருடங்களுக்கு முன் முன்னணி சியர்ச் இஞ்சின் இணையதளமாக இருந்த யாஹூ கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது யாஹூ நிறுவனத்தை வெரிஜோன் என்ற நிறுவனம் $4.5 பில்லியன் கொடுத்து கைப்பற்றியுள்ளது.
அமெரிக்காவின் நம்பர் 1 வயர்லெஸ் ஆப்ரேட்டர் நிறுவனமான வெரிஜோன் நிறுவனம் யாஹூவையும் இணைத்து 'ஓத்' (Oath) என்ற பெயரில் புதிய நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளது. இந்த நிறுவனத்தில் யாஹூவின் 200 மில்லியன் பயனர்கள், ஏஓஎல் நிறுவனத்தின் 150 மில்லியன் பயனர்கள் மற்றும் 100 மில்லியன் வயர்லெஸ் சந்தாதார்கள் ஆகியவற்றை வைத்து டிஜிட்டல் விளம்பர உலகில் பெறும் புரட்சியை ஏற்படுத்த வெரிஜோன் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் யாஹூவை கைப்பற்றும் டீல் முடிந்துவிட்டதை அடுத்து யாஹூவின் சி.இ.ஓஆக இருந்த மரிசா மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக ஓத் நிறுவனத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக டிம் ஆம்ஸ்ட்ராங் பொறுப்பேற்பார் என தெரிகிறது.
மேலும் யாஹூ நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 2000 ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும், வெளியேற்றப்படும் ஊழியர்களில் அமெரிக்கர்களை தவிர மற்றவர்கள் அமெரிக்காவில் இருந்தும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.