பாஜகவில் இணைந்த தி கிரேட் காளி… பகிர்ந்து கொண்ட சில வார்த்தைகள்!

  • IndiaGlitz, [Thursday,February 10 2022]

டெல்லியில் மத்திய அமைச்சர் ஜிரேதந்திர சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் மல்யுத்த வீரர் “தி கிரேட் காளி“ தன்னை பாஜக கட்சியில் இணைந்து கொண்டார். இவருக்கு கட்சி உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்கா போன்ற ஒருசில நாடுகளில் மட்டும் பிரபலமாக இருந்துவந்த மல்யுத்த விளையாட்டில் இந்தியா சார்பாக கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை அள்ளிவந்தவர்தான் திலிப் சிங் ராணா. மல்யுத்தத்தில் இவருக்கிருந்த திறமை காரணமாக ரசிகர்கள் இவரை “தி கிரேட் காளி“ என்றே அழைத்து வந்தனர். அந்த அளவிற்கு மல்யுத்தப் போட்டியை வெறியுடன் ஆடும் ஒரு வீரராக திகழ்ந்து வந்தார்.

49 வயதான காளி முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். பின்னர் கடந்த 2000 முதல் தொழில் முறை மல்யுத்த வீரராக மாறினார். இவர் அண்டர்டேக்கர் முதற்கொண்டு பெரிய வீரர்களையும் எளிதாக வீழ்த்திவந்தார். தற்போது சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகிய இவர் இளம் வீரர்களுக்கு மல்யுத்த பயிற்சி வழங்கி வருகிறார். மேலும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் வெளியான ஒருசில சினிமாக்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்துப்சேயி தி கிரேட் காளி, பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மோடியின் தேசத்துக்கான பணிதான் அவரை சரியான பிரதமராக்குகிறது என்று உணர்கிறேன். அதனால் தேசத்திற்கான அவரது ஆட்சியில் ஏன் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன். பாஜகவின் வளர்ச்சி எனும் தேசிய கொள்கையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்தேன் என்று கூறியுள்ளார்.