Writer Review
ரைட்டர் விமர்சனம் - இந்த ஆண்டின் மிக சிறந்த படைப்புகளில் ஒன்று
பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் தனது முன்னாள் உதவியாளர் பிராங்க்ளின் ஜேக்கப்பின் முதல் திரைப்படமான 'ரைட்டர் ' படத்தை தயாரித்துள்ளார். காவல், துறையில் கீழ் நிலையில் உள்ளவர்களின் உளவியல் சிதைவுகளை ஆராயும் ஒரு போலீஸ் கதையை வழங்கியுள்ளார். ட்ரெய்லர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்திசெய்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தங்கராசு (சமுத்திரக்கனி) திருச்சி காவல்நிலையத்தில் எழுத்தாளராக உள்ளார், ஓய்வு பெற இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. கீழ்நிலை காவலர்களுக்கான நல சங்கத்தை உருவாக்குவதற்கான அவர் எடுக்கும் சட்ட நடவடிக்கைக்கு தண்டனையாக அவர் சென்னை டிரிப்ளிகேனுக்கு மாற்றப்படுகிறார். தங்கராசு ஒரு இளைஞன் தேவகுமாரை (ஹரிகிருஷ்ணன்) காவல் காக்க பணிக்க பாடுகிறார். முதல் தகவல் அறிக்கை செய்யாமலேயே அந்த இளைஞனை லாட்ஜ் ரூம் மற்றும் திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டிருக்கிறான். தான் செய்யாத குற்றத்திற்காக அந்த இளம் பல்கலைக்கழக மாணவன் சிக்கியிருப்பதை தங்கராசு உணர்கிறான். அதிகாரம் துளி அளவும் இல்லாத அந்த எழுத்தர் ஒரு அப்பாவி மனிதனைக் காப்பாற்ற முடியுமா இல்லையா என்பதுதான் படத்தின் மேலோட்டமான திரைக்கதை. அதையும் தாண்டி பல உணர்வு பூர்வமான விஷயங்களை படம் அலசுகிறது.
சமுத்திரக்கனியின் செழுமையான நடிப்புத் திறமையின் இன்னொரு பரிமாணத்தை 'ரைட்டர் ' திரைக்குக் கொண்டுவருகிறது. இங்கே அவர் வழக்கமாக மெசேஜ் சொல்லும் தனது பாணி ஹீரோவிலிருந்து வெகுவாக மாறுபடுகிறார். மனசாட்சி இருந்தும் , பணிவுடன் அதிகாரத்திற்கு அடங்குவது . துவங்கி , அவர் தனது இரண்டு மனைவிகளுடன் சிரம வாழ்க்கை, முதிர்வயதில் பிறந்த மகனுடனான உறவு , முன்னாள் கைதி ஆண்டனியுடனான மது அலப்பறை என எல்லா இடங்களிலும் மின்னுகிறார். பின்னர் அவர் கவனக்குறைவாழும் கடமையாலும் ஒரு நிரபராதி கொல்லப்படப்போகிறான் என்பதை உணர்ந்து உணர்வுபூர்வமாக நடிப்பில் அசத்துகிறார் மனிதர். . இறுதியாக தங்கராசு க்ளைமாக்ஸில் அதிர்ச்சியூட்டும் ஒன்றைச் செய்ய வேண்டியிருக்கும் போது சமுத்திரக்கனி தன்னுடைய நடிப்பு பயணத்தில் ஒரு புதிய உச்சத்தை எட்டுகிறார். மெட்ராஸ் ஜானி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஹரிகிருஷ்ணன், காவல்துறையின் சதியில் பாதிக்கப்படும் அப்பாவி இளைஞனாக கலக்கியிருக்கிறார். படத்தின் ஜீவன் இவருடைய பாத்திர படைப்பும் அவர் நடிப்பும். கவின் ஜெய் பாபு உதவி கமிஷனராக வில்லத்தனத்தில் காட்சிக்கு காட்சி அசத்தியுள்ளார். ஹரிகிருஷ்ணனின் பாசமழை பொழியும் மூத்த சகோதரனாக சுப்பிரமணியம் சிவா சிறப்பாக நடித்துள்ளார். 'மேற்குத் தொடா்ச்சி மலை' புகழ் ஆண்டனி, காவல் துறையினரின் குகையிலேயே அவர்களை நோக்கி கேலி கணைகளை வீசும் முன்னாள் குற்றவாளியாக அதகளம் பண்ணியிருக்கிறார் . திரைக்கதையின் முக்கிய மையமான கதாபாத்திரத்தில் ஜொலித்திருக்கிறார் இனியா. ஜாதி வெறியனான மேல் அதிகாரிக்கு எதிராக அவர் குதிரையேறி செய்யும் சாகசம் தியேட்டரில் கரகோஷ மழையில் நனைத்து விடுகிறார், அவர் முடிவும் மனதை தொடுகிறது. ஜி.எம்.சுந்தர், திலீபன், கவிதா பாரதி, லிசி ஆண்டனி, வி.ஜே.மகேஸ்வரி போன்ற குணச்சித்திர நடிகர்களின் அசத்தலான நடிப்பால் இப்படம் உயர்ந்து நிற்கிறது. .
ரஞ்சித்தின் சர்பட்ட பரம்பரை போலவே 'ரைட்டரும் மிகச் சிறந்த கதாபாத்திரங்களின் வடிவமைப்பால் இதில் நடித்த அனைத்து நடிகர்களும் ஸ்கோர் செய்ய உதவுகிறது. கான்ஸ்டபிள் நிலை காவலர்களின் உளவியல் பாதிப்புகளையும் , போலீஸ் சதியில் சிக்கிய அப்பாவிகளின் ஆபத்தான நிலையையும் சமமாக அணுகி கவனம் ஈர்க்கிறது. அந்த அப்பாவியை எதற்காக போலீஸ் கட்டம் காட்டுகிறது என்கிற காரணம் திரைக்கதைக்கு மேலும் வலு சேர்க்கிறது. சமுத்திரக்கனிக்கு இரண்டு மனைவிகள் இருப்பது சம்பந்தப்பட்ட கிளை கதை முதலில் தேவையா என்று தோன்றினாலும் , பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றும் முடிவை அவர் எடுக்கும்போது அதில் ஒரு வலுவான உந்துதல் ஒளிந்து இருக்கிறது . இந்த படத்தில் ஆகா நெகிழ்ச்சியான விஷயம் கதாநாயகன் தான் கையெடுக்கும் முக்கியமான வேள்வியில் தோற்றாலும் தான் அடுத்த சந்ததிக்கு ஒரு முன்னோடியாக பெரிய வெற்றியை பெறுவது இந்த படத்திற்கு மட்டும் பலம் அல்ல அதுவே நிஜத்திலும் நிதர்சனம்.
ரைட்டரில் மைனஸ் என்று பார்த்தல் ஹரிகிருஷ்ணனின் பின்னணிக் கதை கொஞ்சம் வழக்கமான பாணியில் கையாண்ட பட்டிருப்பதாக தோன்றுவதை மறுப்பதற்கில்லை. அந்த அத்தியாயத்தில் வரும் பாடலும் நடனமும், ரசிக்கும்படியாக இருந்தாலும் பெரும்பாலான காட்சிகளில் தெரியும் எதார்த்தம் இதில் அடிபடுகிறது. கதை நகர்வதில் சமச்சீரற்ற ஓட்டம் இருப்பது போலவும் ஒரு உணர்வு ஏற்படுகிறது .
கோவிந்த் வசந்தாவின் இசை காட்சிகளை, குறிப்பாக உணர்வுப்பூர்வமான பகுதிகளை உயர்த்துகிறது. பிரதிப் காளிராஜாவின் ஒளிப்பதிவும், மணிகண்டன் சிவகுமாரின் படத்தொகுப்பும் குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குனரான ஃபிராங்க்ளின் ஜேக்கப் ஒரு கனமான விஷயத்தைக் கையாள்வதிலும், திரைப்படத்தை பல நிலைகளில் பார்வையாளர்களை தொடுவதிலும் பெரும் திரை ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கிறார். நாம் அன்றாடம் சந்திக்கும் சாதாரண போலீஸ்காரர்களை மனிதம் மிகும் வெளிச்சத்தில் காட்டிய பெருமை அவரை சேரும். முன்னதாக 'சார் பட்டா பரம்பரை' படத்தின் மூலம் இயக்குனராக பெரிய வெற்றியை பெற்ற பா.ரஞ்சித் ஒரு தயாரிப்பாளராகவும் அதே பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
தீர்ப்பு: பல நிலைகளில் நெகிழ செய்யும் இந்த அபூர்வமான படைப்பை நீங்கள் தாராளமாக கைதட்டி வரவேற்கலாம்
- Read in English