ரஜினிக்கு விருது வழங்கியது உள்நோக்கம் உள்ளது: பிரபல எழுத்தாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஐகான் கோல்ட் விருதை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அவருக்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்து வந்தபோதிலும், இன்னொரு பக்கம் இந்த விருது உள்நோக்கமானது என்றும், ரஜினியை பாஜக பக்கம் இழுப்பதற்காக கொடுக்கப்பட்ட விருது என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பிரபல எழுத்தாளரும், திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவுமான பட்டுக்கோட்டை பிரபாகர் தனது சமூக வலைத்தளத்தில் ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்டது குறித்து கூறியதாவது:
நான் ரஜினிக்கு எதிரானவனோ, கமலுக்கு ஆதரவானவனோ அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவின் அடையாளம் என்கிற அடிப்படையில் வழங்கப்படும் விருது குறித்து மட்டுமே என் கருத்தைச் சொன்னேன்.
வசூல் மட்டுமே இந்த விருதுக்கான அளவீடாக இருக்க முடியும் என்று சொல்ல முடியாது. தமிழ் சினிமாவுக்கு உலகளாவிய மார்க்கெட் உருவானதன் பின்னணியில் நடிகர்கள் மட்டுமே காரணமில்லை. அப்படி ரசிக்கப்பட்ட படங்களின் இயக்குனர்களே முக்கிய காரணம்.
மத்திய அரசுக்கு இணக்கமாகவே ரஜினி கருத்துக்களை வெளியிட்டு வருவதும், தமிழக பாரதிய ஜனதாவின் முகமாக ரஜினியை கட்டமைக்க அந்தக் கட்சித் தலைவர்களின் விருப்பமும் அனைவரும் அறிந்ததே. இந்தச் சூழ்நிலையில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதில் கண்டிப்பாக நோக்கம் இருக்கிறது.
சினிமாவின் நவீன தொழில்நுட்பங்களை தனது படங்களில் கொண்டுவந்து அதன் மூலம் சினிமாவின் வளர்ச்சியை எப்போதும் சிந்தனையில் கொண்டிருப்பவர் கமல் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆகவே என் பார்வையில் ரஜினியை விடவும் கமல் திரைத்துறை அடையாளமாகத் தெரிகிறார் என்றேன். அதற்காக ரஜினி என்கிற தனி மனிதருக்கோ, நடிகருக்கோ நான் எதிரி என்கிற ரீதியில் சாயம் பூச வேண்டாம்.
ஒரு மாராட்டியர், கன்னடர் எப்படி தமிழகத்தை ஆள்வது என்று சீமானும், பாரதிராஜாவும் ரஜினியை எதிர்த்து குரல் கொடுத்தபோது தனித்தனியாக இரண்டு நீண்ட பதிவுகள் போட்டு ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்றவன் நான்.
நான் ரஜினியின் முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், மூன்று முடிச்சு, பாட்ஷா, அன்ணாமலை படங்களை இப்போதும் பல முறை விரும்பி எப்படி பார்க்கிறேனோ.. அதேப் போல கமலின் பல திரைப்படங்களுக்கும் ரசிகன்.
காவிரிக்காக ஒட்டு மொத்த திரையுலகமே கர்நாடகத்திற்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து நெய்வேலிக்குச் சென்று போராட புறப்பட்டுச் சென்றபோது தனி மனிதராக சேப்பாக்கத்தில் அடையாள உண்ணாவிரதமிருந்த ரஜினியை நேரில் மேடைக்குச் சென்று வாழ்த்தியவன் நான்’ இவ்வாறு பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout