close
Choose your channels

மலையாள பொறுக்கிகள்: 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தை கடுமையாக விமர்சனம் செய்த திரையுலக பிரபலம்..!

Saturday, March 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான 'மஞ்சும்மெல் பாய்ஸ்' என்ற படத்தை தமிழக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் தமிழ் திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் இந்த படத்திற்கு தங்களது பாசிட்டிவ் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தமிழ் திரை உலக பிரபலம் ஒருவர் இந்த படத்தை கடுமையாக விமர்சித்ததோடு மலையாள பொறுக்கிகள் என்றும் பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் தான் எழுத்தாளர் மற்றும் திரைக்கதை வசனகர்த்தா ஜெயமோகன் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஜெயமோகன் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரச்சாரம் கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி

ஆனால் யானை டாக்டர் எழுதியவன் என்னும் முறையில் இதை எழுத வேண்டியிருக்கிறது. புகழ் மொழிகள், புல்லரிப்புகள், வாழ்த்துக்கள் வழியாக நேற்று மஞ்ஞும்மல் பாய்ஸ் என்னும் மலையாளப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.

முதல் விஷயம், மலையாள சினிமாவுக்கு நம்மவர் அளிக்கும் புல்லரிப்பு. குறிப்பாக தமிழ் ஹிந்து நாளிதழ் மலையாள சினிமா சார்ந்து 24 மணி நேர புல்லரிப்பு நிலையிலேயே இருக்கிறது. எல்லா படமும் அதன் பார்வையில் கிளாஸிக்தான். அவற்றில் பல படங்கள் பெற்ற அன்னை உட்கார்ந்து பார்க்க முடியாத சலிப்பூட்டும் போலி படைப்புகள்.

மஞ்ஞும்மல் பாய்ஸ் படம் தமிழில் வந்திருந்தால் இங்குள்ள எளிய விமர்சகர் கூட ஒரு கேள்வியைக் கேட்டிருப்பார்கள். அதெப்படி தமிழ் நாளிதழ்களில் செய்தி வெளிவந்த அவ்வளவு பெரிய இடர், ஒரு வீர சாதனை கேரளத்தில் அந்த ஊர்க்காரர்களுக்கு மட்டும் தெரியாமலேயே இருந்தது. மஞ்ஞும்மல் பையன்கள் அதை ஊரில் சொல்லவே இல்லையா? அது ஒருவன் இன்னொருவனுக்காக உயிர் கொடுக்க துணிந்த தருணம், அதை அப்படியே மூழ்கடித்து வைத்தார்களா என்ன? நாட்கணக்கில் கூட செய்தி கசியவில்லையா? கிளைமாக்ஸ் நெகிழ்ச்சிக்காக சமையல் செய்து உருவாக்கப்பட்ட காட்சி அது. ஆனால் மல்லுபடம் என்றால் அது ரியலிசம் என்பார்கள் நம்மூர் அரைவேக்காடுகள்.

அது எப்படியோ போகட்டும், எல்லா படங்களுமே விதவிதமான ஜோடனைகள் தான். வெறும் பொழுதுபோக்குகள். எளிய அறிவுத்துறை அறிமுகம் கூட இல்லாமல் சினிமாவில் மட்டுமே உழன்று, அதையே விவாதித்து, ஏதோ அறிவுச்செயல்பாட்டில் இருப்பதாகப் பாவனை செய்து வாழும் பாமரப்பெருங்கூட்டம் இங்குள்ளது. அவர்களும் வெந்ததைத் தின்று விதிவரும் வரை இங்கே வாழவேண்டும். அவர்களின் பைக்காசுதான் நம் வங்கியை நிரப்புகிறது என்பதனால் அவர்கள் மேல் ஓரளவு கரிசனமும் எனக்குண்டு. புல் வளர்கிறதே என மாடு மகிழ்ச்சிதான் அடைய வேண்டும்.

மஞ்ஞும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் உள்ளது. சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடி குடி குடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது. வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது.

குறைந்தது பத்து தடவையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் இந்த மலையாளக் குடிகாரப் பொறுக்கிகள் சாலையில் அடிதடியில் ஈடுபட்டிருப்பதை கண்டிருக்கிறேன். அவர்களின் வண்டிகளின் இருபுறமும் வாந்தி வழிந்து கொண்டிருக்கும் – இந்தப் படத்தில் காட்டப்படுவது போல. குடித்து முடித்த புட்டிகளை தூக்கி வீசி உடைத்துக் கொண்டே இருப்பார்கள். ஐயமிருந்தால் செங்கோட்டை – குற்றாலம் சாலையிலோ, கூடலூர்- ஊட்டி சாலையில் சென்று பாருங்கள் வழிநெடுக உடைந்த, உடையாத புட்டிகளாகவே கிடக்கும். அதையும் இப்படத்தில் பெருமையாகக் காட்டுகிறார்கள்.

பலமுறை இவர்களுடன் சண்டைக்குச் சென்றிருக்கிறோம். ஒரு முறை வாகமண் புல்வெளியில் எங்களுடன் வந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான செந்தில்குமார் இவர்கள் தூக்கி வீசிய புட்டிகளை அவரே அள்ளி பொறுக்கி சேர்த்து அகற்றினார்.

ஆண்டுக்கு இருபது யானைகளாவது இந்த புட்டிகளால் கால் அழுகி இறக்கின்றன. கொதித்துப்போய் நான் அதைக் கண்டித்து எழுதிய யானை டாக்டர் மலையாளத்திலும் பல லட்சம் பிரதி விற்றிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் அதை வாசித்திருக்க வாய்ப்பே இல்லை.

இந்த மலையாளப் பொறுக்கிகளுக்கு ஒரு வார்த்தை இன்னொரு மொழி தெரியாது. எல்லா கேள்விக்கும் மலையாளத்திலேயே பதில் சொல்வார்கள். ஆனால் அவர்கள் மொழி பிறருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்னும் தெனாவெட்டு தெரியும். இந்த படத்தில் தமிழக போலீஸ் அவர்களை நடத்தும் விதமும் உண்மையானது. அடி தவிர எதுவுமே இவர்களுக்குப் புரிவதில்லை.

கேரளத்தில் திருமண நிகழ்வுகளுக்கு செல்வதே பெருந்துன்பமாக ஆகிவிட்டிருக்கிறது. மலையாளிகளே இருவகை. அயல்நாட்டில் ரத்தம் சுண்ட உழைப்பவர்கள். அவர்களைச் சுரண்டி உள்நாட்டில் குடிப்பவர்கள். இந்தக் குடிகாரக் கும்பல் எந்தக் கல்யாணத்திலும் வந்து வெறியாட்டம் இடுகிறார்கள். மணப்பந்தலிலேயே வாந்தி எடுப்பவர்கள் ஏராளமானவர்கள். மணப்பந்தலில் மணமகனே வாந்தி எடுப்பதை கண்டிருக்கிறேன்.

குடியில் தமிழகம் கேரளம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும். கேரளத்திலுள்ள வேறுபாடு என்னவென்றால் கேரளம் போதைவெறியை, அதன் எல்லாக் கீழ்மைகளையும் இயல்பானதாக ஆக்கிக்கொண்டே இருக்கிறது. சட்டத்தை மதிக்கும் சாமானியனை மடையனாகவும், உதவாக்கரையாகவும் அது சித்தரிக்கிறது. கேரள கடற்கரைகளில் மாலை ஏழு மணிக்கு மேல் பெண்கள் மட்டுமல்ல சாமானியர்களான ஆண்கள் கூட செல்ல முடியாது- அதை போலீஸே அறிவுறுத்துகிறது.

கேரள சினிமா தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக இருப்பதென்றாலே குடித்துச் சண்டைபோட்டு, வம்பிழுத்து, வாந்தி எடுத்து, சாமானியர்களை நிலைகுலையச் செய்து கும்மாளமிடுவது என்றே காட்டி வருகிறது. குடிக்காமல் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்கும் நாலுபேரை மலையாள படங்களில் எப்போதாவது பார்த்ததுண்டா ? இந்தப் படமும் அந்தப் பொறுக்கிகளை ‘ஜாலியானவர்கள்’ என்று சொல்கிறது. அதற்கான சமூக ஏற்பை சினிமா வழியாக மெல்ல மெல்ல உருவாக்குகிறார்கள். அதாவது ஒரு தமிழ் கதை நாயகன் எந்தப் பொறுக்கிகளிடமிருந்து சாமானியர்களை காப்பாற்றுவாரோ அந்தப் பொறுக்கிதான் இன்றைய மலையாள சினிமாவின் கதை நாயகன்.

காரணம், எர்ணாகுளம் மையமிட்ட ஒரு சிறு போதையடிமை கும்பல் இன்றைய மலையாள சினிமாவின் மையத்தில் உள்ளது. அங்கே மது வெறி இரவும் பகலும். அதைவிட மோசமான போதைகள். போதைப்பார்ட்டிகள் கேரளத்தில், குறிப்பாக எர்ணாகுளத்தில், உள்ள அளவு இந்தியாவில் எங்குமே இல்லை. மலையாளக் கதாநாயக நடிகர்கள் கூட போதை மருந்து வழக்குகளில் சிக்கிக்கொள்வது அடிக்கடி செய்திகளில் வருகிறது. அவர்கள்தான் மலையாளச் சமூகத்தையே போதை வெறியை இயல்பாக எடுத்து கொள்ளப் பழக்கப்படுத்துகிறார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு ‘கிளி போயி’ ‘ஒழிவுநேரத்தே களி’ ‘வெடிவழிபாடு’ ’ஜல்லிக்கட்டு’ போன்று போதையையும் விபச்சாரத்தையும் normalaize செய்யும் சிறிய படங்கள் கேரளத்தில் வெளிவந்தன. உள்ளீடற்ற அசட்டுப் போலிப்படங்கள் அவை. அவை அறிவுஜீவிகளால் ’இயல்பான கலைப்படைப்புகள்’ என கொண்டாடப்பட்டன. இங்கும் முதிரா அறிவுஜீவிகள் அவற்றைக் கொண்டாடினார்கள். இன்று அந்தப்போக்கு மையச் சினிமாவாக ஆகியிருக்கிறது. கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் இந்த சினிமாக்காரர்கள் மேல் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர்கள் எடுக்கும் போதை வெறி சினிமாக்களை தமிழகத்தில் கொண்டாடுபவர்கள் அசடுகள் அல்லது அயோக்கியர்கள் என்றே வகைப்படுத்துவேன். வணிக சினிமா என்பது கலையொன்றும் அல்ல. அது எந்த வகையான அறிவுப்பயிற்சியும் கலையறிமுகமும் இல்லாத மாபெரும் மக்கள் திரளை நோக்கி நேரடியாகப் பேசுகிறது. அதற்கு கலைக்குரிய சுதந்திரம் அளிக்கப்படவே கூடாது. அறிவார்ந்த எதிர்ப்பை அளிக்க முடியாத எளிய மக்கள் திரளை அந்த கட்டின்மை சீரழித்துவிடும்.

இந்தக் கும்பல் சுற்றுலாத் தலங்களை சீரழிப்பது ஒரு பக்கம். ஆனால் அடர்காடுகளுக்குள் அத்து மீறுகிறார்கள். அதற்காக ஊடுவழிகளை எல்லாம் தேர்வு செய்கிறார்கள். எந்த சட்டத்தையும் பொருட்படுத்துவதில்லை. எந்த எச்சரிக்கைகளையும் பேணுவதில்லை. கொய்யாப்பழங்களுக்குள் மிளகாய்ப்பொடி நிறைத்து குரங்குகளுக்கு கொடுக்கிறார்கள். யானைகளை நோக்கி புட்டிகளை வீசுகிறார்கள். அடர் காடுகளுக்குள் உச்சத்தில் பாட்டு போட்டு கூத்தாட்டம் போடுகிறார்கள்.

மே மாதம் மிக ஆபத்தானது. பீடி சிகரெட்டை காய்ந்த தமிழகக் காடுகளுக்குள் வீசி விட்டுச் செல்வார்கள். பொதுவாகக் கேரளக் காடுகள் காய்வதில்லை. இங்கே அப்படி அல்ல. பல ஏக்கர்கள் எரிந்து அழியும். பல்லாயிரம் உயிர்கள் சாகும். இவர்கள் கவலையே படுவதில்லை.

கேரளத்தில் உள்ள ரிசார்ட்டுகளுக்கு செல்வதென்பது மிக ஆபத்து. பல வெளியே சொல்ல முடியாத அனுபவங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். என் நண்பர் ஒருவரின் மகளையும் மருமகனையும் தேனிலவுக்காக நானே அனுப்பினேன். அன்று இப்படி ஒரு கும்பல் வந்து செய்த அட்டூழியத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓட வேண்டியிருந்தது. நான் ஒரு சினிமாவுக்காக தங்கியிருந்த மானந்தவாடி ரிசார்ட்டில் ஒரு வட இந்திய இணையரை இக்கும்பல் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது. நான் அதில் தலையிட்டு எனக்குத் தெரிந்தவர்களை எல்லாம் அழைத்து காப்பாற்ற நேர்ந்தது (அங்கே மானேஜர் கூட இல்லை. இரண்டு மலையாளம் கூட தெரியாத வங்காளிப் பையன்கள் மட்டுமே)

இந்தப் பொறுக்கிகளை எளியவர்களின் கொண்டாட்டம் என்று காட்டி நியாயப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களை உன்னதமாக்குகிறது மஞ்ஞும்மல் பாய்ஸ். அவர்களை தியாகிகள், நட்பின் இலக்கணங்கள் என்று சொல்ல முயல்கிறது. எந்த பொறுக்கிக் கும்பலுக்கும் அவர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கும். குற்றவாளிக் கூட்டங்களுக்குள்ளேயே தியாகவுணர்வு இருக்கும். அதெல்லாம் உயர்ந்த உணர்வுகள் அல்ல. உண்மையிலேயே இப்படி நடந்து, அதில் ஒருவனுக்கு தேசிய விருது அளிக்கப்பட்டிருப்பதாக படத்தின் இறுதியில் செய்தி காட்டப்படுகிறது. சட்டப்படி சிறையில் தள்ளப்பட வேண்டியவன் அவன்.

இந்தக் கும்பல்களை பற்றிய விழிப்புணர்வை தமிழகத்திலும் கர்நாடகத்திலும் இந்தச் சினிமா உருவாக்குமென்றால் நல்லது. இவர்களை போலீஸ் நேரடியாகவே குற்றவாளிகளாக மட்டுமே நடத்த வேண்டும். ஒருபோதும் ஒருவகையிலும் ஆதரிக்கக் கூடாது. அவ்வப்போது இவர்கள் எங்காவது சிக்கி சாவதுகூட நல்லதுதான். நம் காடுகள் காப்பாற்றப்படும். அது இவர்களுக்கு இயற்கை அளிக்கும் இயல்பான தண்டனை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment