சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்

  • IndiaGlitz, [Friday,March 24 2017]

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார். அவருக்கு வயது 85.

தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராகிய அசோகமித்ரன், கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த நிலையில் நேற்றிரவு சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

தியாகராஜன் என்ற இயற்பெயரை கொண்ட அசோகமித்ரன் ஆந்திர மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தில் பிறந்தார். 21வது வயதில் சென்னைக்கு வந்த அசோகமித்ரன் ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் 16 ஆண்டுகாலம் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றியவர். பணியின் இடையிலேயே சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்த அசோகமித்ரன், கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் முழு நேர எழுத்தாளராக மாறினார்.

அசோகமித்ரனின் சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்கள் ஆகியவை பக்குவப்பட்ட தமிழ் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1996 ஆம் ஆண்டு 'அப்பாவின் சிநேகிதர்' என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருதை பெ\ற்றார். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஐதராபாத்தை கதைக்களமாக கொண்டு அமைந்திருக்கும். மேலும் சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் இருந்ததால் தமிழ் எழுத்துலகில் இவர் வித்தியாசமானவராக பார்க்கப்பட்டார்.

சாகித்ய அகாடமி விருது மட்டுமின்றி தமிழக அரசின் இலக்கிய சிந்தனை' விருதை 3 முறையும், லில்லி நினைவு விருது', ராமகிருஷ்ணா ஜெய்தயால் விருது', அக்‌ஷரா விருது', எம்.ஜி.ஆர். விருது', தேசிய எழுத்தாளர் விருது', கே.என்.எஸ்.விருது' உள்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

அமெரிக்க இலக்கியங்களை தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்வது மற்றும் இவரது படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தது ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. செய்த பெருமை இவரையே சாரும். 1980-ம் ஆண்டுகளில் இவரது பெரும்பாலான படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.

மறைந்த அசோகமித்ரனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் ரவிசங்கர், முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.