தோல்வி காரணமாக இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை… சோகச் சம்பவம்!
- IndiaGlitz, [Thursday,March 18 2021]
பாலிவுட்டில் எடுக்கப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் “டங்கல்“. இத்திரைப்படம் உண்மையைக் கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஹரியாணா மாநிலத்தில் மல்யுத்த வீரராக இருந்து தனது பெண் பிள்ளைகளையும் அதே துறையில் வளர்த்த மல்யுத்த வீரர் மகாவீர் சிங் பொகத்தின் கதையைத் தழுவித்தான் நடிகர் ஆமிர்கான் “டங்கல்“ படத்தை தயாரித்து இருந்தார்.
இந்த பின்னணில் இருந்து வந்தவர்கள்தான் தற்போது இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகளாக இருக்கும் பபிதா மற்றும் கீதா பொகாத் ஆகிய இருவரும். இவர்கள் மல்யுத்த வீளையாட்டில் இந்தியாவிற்காக பல வெற்றிக் கோப்பைகளை பெற்றுத் தந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் தங்கையான ரித்திகா பொகத் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மார்ச் 12-14 ஆம் தேதிகளுக்கு இடையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடைபெற்றது என்றும் அந்தப் போட்டியில் ரித்திகா ஒரு பாயிண்ட் குறைவு காரணமாக தோல்வி அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்தத் தோல்வியில் மனம் உடைந்த ரித்திகா நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது. இத்தற்கொலை தொடர்பாக மகாவீர் சிங் பொகத், பபிதா, கீதா பொகத் ஆகிய மூவரும் கடும் வருத்தத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கீதா பொகத், இந்தியாவிற்காக முதல் காமன்வெல்த் தங்கப்பதக்கதை கடந்த 2010 ஆம் ஆண்டு பெற்றுத்தந்தவர் என்பதும் ஒலிம்பிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை கடந்த 2012 ஆம் ஆண்டு தக்கவைத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு பபிதா கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற காமென்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கமும் 2012 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலமும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த்தில் தங்கமும் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பபிதா, கீதாவின் தங்கையான ரித்திகா தற்கொலை செய்து கொண்டு இருப்பது கடும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.