கோடி கணக்கில் விலை… ஆனாலும் விற்பனையில் சக்கைபோடு போடும் சொகுசு கார்!
- IndiaGlitz, [Wednesday,January 12 2022]
கொரோனா நேரத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் 117 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதல் முறையாக விற்பனையில் சாதனைப் படைத்திருப்பதாகத் தகவல் வெளியிட்டு உள்ளது.
உலகில் விலையுயர்ந்த ஆடம்பர சொகுசு கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் 2020 வருடத்தைக் காட்டிலும் 2021இல் 49% அதிக விற்பனையை செய்துள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் இந்த விற்பனை 117 வருடகால வரலாற்றில் புது திருப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் 5,586 கார்களை கடந்த வருடம் டெலிவரி செய்த இந்த நிறுவனம் கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் ஆர்டர்கள் மேலும் குவிந்து வருவதாகச் சுட்டிக்காட்டி இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸின் ஆரம்ப விலையே இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.6 கோடியைத் தாண்டுகிறது. இதில் அதிக விரும்பப்படும் கார்களில் ஒன்றான பாண்டம் VIII வகை கார் இந்திய மதிப்பில் 9.5 கோடியைத் தாண்டுகிறது. இப்படி இருக்கும்போது கோஸ்ட், பிளாக் பேட்ஜ் கோஸ்ட், கல்கனன் போன்ற கார்களின் விலை உச்சத்தைத் தொடும் என்றே கூறலாம்.
மேலும் சமீபத்தில் பாண்டம், டெம்பஸ், லேண்ட்ஸ்பீட் பிளாக் பேட்ஸ் வ்ரைத் போன்ற கார்களுக்கான மவுசு அதிகரித்து இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தனது கனவுத் திட்டமான “ஸ்பெக்டர்’‘ மின்சார கார் உற்பத்தியையும் அந்த நிறுவனம் ஏற்கனவே துவங்கியிருக்கிறது. இந்தக் கார் வரும் 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.