இரண்டாம் உலகப்போருக்குப்பின் உலகம் சந்திக்கும் மிகப்பெரிய அபாயம்!!! ஐ.நா. தலைவர் கருத்து!!!
- IndiaGlitz, [Wednesday,April 01 2020]
கொரோனா நோய்த்தொற்று பரவலினால் உலகம் சந்தித்த கடும்பொருளாதார தாக்கம் குறித்து அறிக்கையை வெளியிட்ட ஐ.நா. சபையின் தலைவர் அன்டோனியா குட்டரஸ் “இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் கொரோனா வைரஸ் தொற்று” எனக் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உலகம் முழுவதும் 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த எண்ணிக்கையில் அதிகபடியாக இத்தாலியில் 12,428 பேரும், ஸ்பெயினில் 8,464 பேரும், சீனாவில் இதுவரை 3305 பேரும் உயிரிழந்துள்ளனர். தற்போது அமெரிக்கா கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
தனது அறிக்கையில் ஐ.நா. சபையின் தலைவர் அன்டோனியா குட்டரஸ் “சமூகத்தை மோசமாக தாக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்று, மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் காவு வாங்கி வருகிறது. ஐ.நா. தொடங்கப்பட்டத்தில் இருந்தே அதிக பாதிப்பை ஏற்படுத்தியதில் கோவிட் – 19 முதல் இடத்தை பிடித்து உலக நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதனால் உலகளவில் அதிக மந்தநிலை உருவாகியிருக்கிறது. இந்தத் தொற்றை சமாளிக்க ஒன்றிணைந்த சுகாதார நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இந்த நோய்த்தொற்று பரவலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளுக்கு உதவுமாறு வலியுறுத்தியுள்ளார். அப்படி ஒருவருக்கொருவர் உதவி செய்யவில்லை என்றால் நோய்த்தொற்று காட்டுத்தீ போல பரவும் எனவும் எச்சரிக்கை செய்தார். உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 25 மில்லியன் பேர் வேலையிழந்துள்ளனர் எனவும் ஐ.நா. அறிக்கையொன்று குறிப்பிடுகிறது. மேலும், கொரோனா பாதிப்பினால் அந்நிய நேரடி முதலீடுகள் பாதிக்கப்பட்டு 40 சதவீதம் வரை கீழ்நோக்கி போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.