உலகிலேயே விலை மலிவான கொரோனா பரிசோதனை கருவி: இந்திய ஐஐடி நிறுவனத்தின் புதிய சாதனை!!!
- IndiaGlitz, [Thursday,July 16 2020]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனையும் அதிகரித்து இருப்பதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை மிக விரைவாகவும் துல்லியமாகவும் கண்டுபிடித்துக் கொடுக்கும் புதிய சோதனை கருவியை டெல்லி ஐஐடி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இக்கருவியை மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
RT PCR முறைப்படி தயாரிக்கப் பட்டுள்ள கொரோனா பரிசோதனை கருவி உலகிலேயே விலை மலிவான வகையில் உருவாக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி ஒரு கருவியின் விலை ரூ.650 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கருவி கொரோனா வைரஸ் பாதிப்பை மிக விரைவாக நடத்திக் கொடுக்கும் எனவும் டெல்லி ஐஐடி உயிரித் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தக் கருவியைக் கொண்டு இந்தியாவில் ஒரே மாதத்தில் 2 லட்சம் கொரோனா மாதிரிகளை சோதனை செய்யலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது நியூ டெக் மெடிக்கல் நிறுவனத்தில் இருந்து CroSure என்ற பெயரில் இந்தக் கருவி விற்பனைக்கு வந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 3,20,161 கொரோனா மாதிரிகள் பரிசோதனைச் செய்யப்பட்டதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப் பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. அதுவும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தற்போது கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப் பட்டுள்ளதாகவும் மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
உலகச் சுகாதார அமைப்பின் வலியுறுத்தலின்படி நாட்டில் உள்ள 10 லட்சம் பேருக்கு 140 கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது இந்திய மாநிலங்களில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை இதைவிட அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. அரசு சுகாதார நிலையங்களின் கீழ் 865 பரிசோதனை நிலையங்கள், தனியார் நிறுவனங்களின் கீழ் 358 பரிசோதனை நிலையங்கள் என மொத்தம் 1223 நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் Truenat, CBNAAT, RTPCR எனப் பல முறைகளில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. தற்போது புதிய கருவி கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் மேலும் பரிசோதனைகளின் எண்ணிக்கை உயரும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.