உலக தூக்கத் தினம் இன்று...
- IndiaGlitz, [Friday,March 13 2020]
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே!
கண்ணதாசனின் இந்த வரிகளில் தூக்கத்தோடு அமைதியும் கூடவே சேர்ந்து கொள்கிறது. இது மருத்துவ ரீதியாகவும் உண்மையான ஒரு கருத்து. ஒருவரின் இயல்பான, ஆரோக்கியமான உடல் நலத்திற்கு தூக்கம் என்பது அவசியமான ஒன்று. அந்தத் தூக்கத்தை வேலைகளுக்கு நடுவில் தொலைத்து விட்டோம் எனில் நாம் உடல் நலத்தையும் இழக்க நேரிடும்.
மனிதனின் தூக்கத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விவாதங்கள் மற்றும் மருத்துவ மேம்பாடுகள் பற்றிய செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக் கிழமை உலக தூக்க நாள் கொண்டாடப் பட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கடைபிடிக்கப் பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஒரு மனிதன் தன் வாழ்வில் எதை வேண்டுமானாலும் தவிர்க்கலாம் ஆனால் தூக்கத்தை தவிர்க்கக் கூடாது, தவிர்க்கவும் முடியாது என மருத்துவ உலகம் கூறுகிறது. உலகில் மிகவும் சவாலான விஷயங்களை அங்கீகரித்து விருதுகளை வழங்கி கௌரவிக்கும் கின்னஸ் அமைப்பு கூட தூங்காமல் இருக்கும் சாதனையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. காரணம் தூக்கத்தை வலுக்கட்டாயமாக தவிர்க்கும்போது எளிதில் மரணம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
தொடச்சியான தூக்கத்தை குறைத்துக் கொண்டு வருபவர்களுக்கு டயாபெட்டீஸ், உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தூக்கமின்மையால் உடலில் கார்டிசோல் ஹார்மோன் குறைபாடுகளும் அதிகரித்து விடுகிறது. மேலும், மன அழுத்தம் ஏற்படுவதற்கும் தூக்கமின்மை காரணமாகிறது.
பொதுவாகத் தூக்கத்தின் அளவும் நேரமும் ஒவ்வொருவரது உடல் மற்றும் வாழ்வியலை பொறுத்தது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 7 மணிநேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர். ஒரு சிலர் தங்களது வாழ்வு முழுவதுமே தூங்கும் நேரத்தை முறையாக ஒரே மாதிரி கடைப்பிடிக்கின்றனர். சிலர் எப்போது வேண்டுமானாலும் தூங்கும் பழக்கத்தையும் கொண்டிருக்கின்றனர். தூங்குவது எவ்வளவு நல்ல விஷயமாக இருக்கிறதோ அதேபோல அதிகளவு தூக்கமும் உடலுக்கு கெடுதலை விளைவிக்கின்றன. எனவே அளவான மற்றும் முறையான தூக்கத்தை ஒவ்வொருவரும் கடைபிடிப்பது அவசியமாகும்.
பிரபலங்கள் தூங்கும் கால அளவு
உலகில் சில பிரபலங்கள் தங்களது தூக்கத்தை ஒழுங்குப் படுத்திக் கொண்டதால் மிகப் பெரிய வெற்றிகளையும் குவித்து இருக்கின்றனர். உலகின் முதல் பணக்காரரும் முதலீட்டாளருமான பில் கேட்ஸ் ஒரு நாளைக்கு உறுதியாக இரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை என 7 மணி நேரம் தூங்குவாராம். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிரிவாகியான டிம் கும் இரவு 9.30 மணி முதல் காலை 4.30 மணி வரை என இவரும் 7 மணி நேரம் உறங்குகிறார்.
பெப்சி நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை என 5 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார். உலகில் அனைவராலும் ஈர்க்கப் பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இரவு 1 மணி முதல் காலை 7 மணி வரை என 6 மணி நேரம் தூங்குவதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.