இந்த உலகம் நீங்கள் அழவேண்டும் என்று விரும்பியது: அஸ்வின் நெகிழ்ச்சி பதிவு
- IndiaGlitz, [Friday,March 30 2018]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தும், துணை கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரும் தூக்கியடிக்கப்பட்டது மட்டுமின்றி இருவரும் ஒரு ஆண்டுக்கு விளையாட தடையும் விதிக்கப்பட்டது
மேலும் இந்த பிரச்சனையால் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்பான்சர் செய்து வந்த மெக்மெல்லன் நிறுவனம் தனது ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. அதேபோல் டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகிய வீரர்களுடன் செய்துகொண்டிருந்த ஒப்பந்தத்தை 'ஆஸிக்ஸ்' நிறுவனம் முறித்து கொண்டது.
இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித், தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பும் முன் செய்தியாளர்களுக்கு உணர்ச்சிகரமான பேட்டி அளித்தார். ஒரு கட்டத்தில் அவர் கண்ணில் இருந்து தாரைதாரையாய் கண்ணீர் வழிந்தது. பேட்டி எடுத்த பத்திரிகையாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். ஸ்மித்தின் இந்த நெகிழ்ச்சியான மன்னிப்பு கலந்த பேட்டி அவர் மீது பரிதாப்பட வைத்தது என்றே கூறலாம்
இந்த நிலையில் இதுகுறித்து தமிழக வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இந்த உலகம் நீங்கள் அழ வேண்டும் என்று விரும்பியது. நீங்கள் அழுது முடித்தபின்னர் அவர்கள் திருப்தியடைந்து மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். புரிந்துணர்வு என்பது வார்த்தையாக மட்டும் அல்லாமல், மக்களிடம் இருந்திருக்க வேண்டிய ஓர் உணர்வு. ஸ்மித்துக்கும் பான்கிராஃப்டுக்கும் வார்னருக்கும் இதை எதிர்கொள்ள சக்தியை கடவுள் அளிக்க வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்கள் சங்கம் அவர்களுக்கு வேண்டிய ஆதரவை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.