யுகேஜி படிக்கும்போதே உலக சாதனை படைத்த தமிழக சிறுவன்!
- IndiaGlitz, [Saturday,June 11 2022]
யுகேஜி படிக்கும்போதே உலக சாதனை படைத்திருக்கிறார் நாமக்கல் மாவட்டத்தில் வசித்துவரும் சிறுவன் கே.எம்.தட்ஷன். இவர் தன்னுடைய அறிவுத்திறனுக்காக உலக அளவில் சாதனை படைத்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த சண்முகபுரம் பகுதியில் வசித்துவரும் குமார சரவணன் மற்றும் மனோண்மணி தம்பதிகளின் ஒரே மகனான கே.எம்.தட்ஷன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் யுகேஜி படித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கும் தலா 10 வார்த்தைகள் வீதம் மொத்தம் 260 வார்த்தைகள் மற்றும் தமிழில் உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்தில் துவங்கும் 173 வார்த்தைகள் கூடவே பறவைகள், விலங்குகள், பழங்கள், வாகனங்கள் என மொத்தம் 800 வார்த்தைகளுக்கு மேல் தனது நினைவில் வைத்திருக்கிறார்.
இதுகுறித்த படங்களைக் காட்டும்போது சிறுவன் தட்ஷன் அசராமல் அதற்கான வார்த்தைகளைக் கூறி பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். இவரது தனித்திறமையை அங்கீகரித்து யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் ரெக்டி மோஸ்ட் டாப்பிக்ஸ் நேம் அன்டு ஆப்ஜக்ட்ஸ் எனும் புத்தகத்திலும் பியூட்சர் கலாம் புக் ஆப் ரிகார்ட் புத்தகத்திலும் சிறுவன் தட்ஷனின் பெயர் தற்போது இடம்பிடித்திருக்கிறது.
மேலும் உலகச் சாதனை படைத்த தட்ஷனுக்கு விண்வெளி ஆராய்ச்சி துறையில் இப்போதே ஆர்வம் இருப்பதாக அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். யுகேஜி படிக்கும்போதே உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்திய தட்ஷனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.