உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் தகுதி இழப்பு: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அதிர்ச்சி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் போட்டி ஒன்றில் விளையாடிய உலகின் நம்பர் ஒன் வீரர் ஆனந்த் நோவக் ஜோகோவிச் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

நேற்று ஸ்பெயின் நாட்டின் பாப்லோ கரீனோ பஸ்டாவை எதிர்த்து விளையாடிய ஜோகோவிச் 5-6 என்ற கணக்கில் தனது முதல் செட்டை இழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பந்தை வேகமாக டென்னிஸ் கோர்ட்டுக்கு வெளியே அடித்தார். அந்த பந்து எதிர்பாராத விதமாக அங்கிருந்த பெண் அதிகாரி ஒருவரின் கழுத்தில் தாக்கியது. இதனால் வலியால் துடித்த அந்த பெண் அதிகாரி சுருண்டு விழுந்தார்

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோகோவிச் உடனடியாக அந்தப் பெண் அலுவலரிடம் சென்று தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இதனை அடுத்து இதுகுறித்து விசாரணை செய்த போட்டியின் நடுவர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்

இது எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம் என்றும் தான் வேண்டுமென்றே இதனை செய்யவில்லை என்றும் இதற்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஜோகோவிச் கூறியும் அவரது வாதத்தை நடுவர் ஏற்கவில்லை. கிராண்ட்ஸ்லாம் போட்டி விதிகளின்படி ஜோகோவிச் தகுதிநீக்கம் செய்யப்படுவதில் நடுவர் உறுதியாக இருந்ததால் மிகுந்த சோகத்துடன் ஜோகோவிச் மைதானத்தை விட்டு வெளியேறினார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இந்த ஆண்டு ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நடால் பங்கேற்காததால் ஜோகோவிச் எளிதில் பட்டம் வெல்ல வாய்ப்பு இருந்ததாகக் கணிக்கப்பட்ட நிலையில் அவர் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது