உலகிலேயே மிக குறைந்த விலையில் கொரோனா பரிசோதனை கருவி… WHO வின் புதிய அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Tuesday,September 29 2020]

 

பொருளாதார கட்டமைப்பில்லாத மற்றும் மருத்துவக் கட்டமைப்பு குறைவாக இருக்கும் நாடுகளில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தவும் விரைவுப்படுத்தவும் இயலாத நிலைமை இருந்து வருகிறது. இந்நிலைமையை போக்க மிகவும் விலை குறைந்த கொரோனா பரிசோதனை கருவிகளை தயாரித்து அதை உலக நாடுகளுக்கு பகிர்ந்து அளிக்கவும் முடிவு செய்துள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இந்த அறிவிப்பின்படி உலகிலேயே குறைந்த விலையில் கொரோனா பரிசோதனை கருவிகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. 5 டாலர் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்தக்கருவி இந்திய மதிப்பில் ரூ.300 க்கு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. நகர்ப்புற வசதியே இல்லாத உள்ளூர் பகுதிகளில் இத்தகைய கருவிகளைக் கொண்டு மிக விரைவாக கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள இக்கருவி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் எனவும் உலகச் சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் இந்தப் புதிய கருவியைக் கொண்டு வெறுமனே 10-30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனையை முடித்துக் கொள்ள முடியும். இத்தனை விரைவான வேகத்தில் கொரோனா பரிசோதனைகளைச் செய்யும்போது 6 மாதங்களில் 12 கோடி பேருக்கு இந்தப் பரிசோதனையை முடிக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். அந்த வகையில் 12 கோடி கொரோனா கருவிகளை உற்பத்தி செய்வதற்காக மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட் மற்றும் எஸ்.டி பயோசென்சார், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் உலகச் சுகாதார நிறுவனம் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.