தங்கச் சங்கிலி வழங்கிய இளம் பெண்ணுக்கு பணி ஆணை… நேரில் வழங்கிய அமைச்சர்!
- IndiaGlitz, [Tuesday,June 15 2021]
முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு தான் அணிந்து இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை வழங்கிய இளம்பெண்ணுக்கு தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததோடு, அதற்கான பணி ஆணையை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று வழங்கியுள்ளார்.
மேட்டூர் அணை திறப்புக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் வந்து இருந்தார். அப்போது பி.இ படித்த இளம்பெண் சௌமியா தனக்கு வேலை வேண்டும் என்ற கோரிக்கையோடு 2 பவுன் தங்கச் சங்கிலியையும் முதலமச்சர் பொதுநிவாரண நிதிக்கு வழங்கி இருந்தார். இதைப் பார்த்து வியந்து போன முதல்வர் வறுமையிலும் பொதுநலன் கருதிய பொன் மகளுக்கு உறுதியாக வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அந்த வகையில் சௌமியாவிற்கு தற்போது மேட்டூர் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பை பெற்றுத்தந்து, அதற்கான பணி ஆணையை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று வழங்கியுள்ளார். மேலும் சௌமியாவிற்கு முதல்வர் அவர்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக் கூறியுள்ளார்.
இதனால் உற்சாகம் அடைந்துள்ள சௌமியா முதல்வரின் நம்பிகையைக் காப்பாற்றுவேன். எனக்கு கிடைத்த சேவை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வேண்டும் எனவும் முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது.
— M.K.Stalin (@mkstalin) June 13, 2021
பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது.
பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். pic.twitter.com/Ioqt6dq5YU