வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டுமே பணி… தொழிலாளர்களை மகிழ்விக்கும் தகவல்!
- IndiaGlitz, [Thursday,February 17 2022]
பெல்ஜியம் நாடாளுமன்றத்தில் ஒரு புது சட்டவரைவு குறித்த விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. தொழிலாளர் நலன்சார்ந்த இந்த வரைவிற்கு உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
பெல்ஜியம் நாட்டின் பிரதமர் அலெக்சாண்டா டீக்ரு அந்நாட்டின் தொழிலாளர் நலனுக்காக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை எனும் புது சட்டவரைவை கொண்டு வந்துள்ளார். இந்தச் சட்டவரைவின் மீதான விவாதம் தற்போது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சட்டம் அமலாக்கப்படும்போது அந்நாட்டில் உள்ள தொழிலாளர்கள் வாரத்தில் 4 நாட்களுக்கு 36 மணிநேரம் மட்டும் வேலைப்பார்த்தால் போதுமானது. மற்ற நாட்களில் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடலாம் எனக் கூறப்படுகிறது.
கொரோனா நேரத்தில் ஒட்டுமொத்த பணிச்சூழலும் மாறிப்போயிருக்கிறது. இதனால் பல தொழிலாளர்கள் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு இருக்கும் நிலையில் தொழிலாளர் நலன்சார்ந்த திட்டத்திற்கு பெல்ஜியம் அரசு முனைப்பு காட்டிவருகிறது. இதைப் பலரும் வரவேற்றுள்ள நிலையில் இதற்கு முன்பு ஸ்காட்லாந்து, ஸ்பெயின், ஐஸ்லாந்து போன்ற நாடுகளும் இதே முறையை பரிசோதித்து பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.