மேலும் ஒரு வருஷத்துக்கு வொர்க் பிஃரம் ஹோம்… முக்கிய நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!!
- IndiaGlitz, [Tuesday,July 28 2020]
கடந்த பிப்ரவரியில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்த நிலையில் கூகுள் நிறுவனம் அதன் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிசெய்யுமாறு அறிவிப்பு வெளியிட்டது. உலகிலேயே பெரிய நிறுவனமான கூகுள் அனைத்து ஊழியர்களையும் வீட்டில் இருந்து பணிசெய்யுமாறு கேட்டுக்கொண்டதால் மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து இதே வழிமுறையைப் பின்பற்றின. கூகுள் நிறுவனம் முதலில் வெளியிட்ட அறிவிப்பில் வருகிற டிசம்பர் மாதம் வரை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிசெய்து கொள்ளலாம் எனத் தெரிவித்து இருந்தது.
தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சலில் ஒரு முக்கியத் தகவலை அனுப்பியிருப்பதாக அமெரிக்காவின் வால்ட்ஸ்டீரிட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதில் டிசம்பர் வரை நீடிக்கப்பட்ட வொர்க் பிஃரம் ஹோம் அடுத்த ஆண்டு ஜுன் 30, 2021 வரை தொடரும் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஒரு ஆண்டிற்கு கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களது வீடுகளிலேயே இருந்து பணியாற்றும் படியான திட்ட அமைப்புகளை வகுப்பதற்கு உதவியாக இருக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
உலகிலுள்ள பெரும்பலான பகுதிகளில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ஊழியர்களை நேரில் அழைக்க பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் கூகுள் வெளியிட்ட அறிவிப்பு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. நோயின் தீவிரத்தன்மை குறையாமல் இருப்பதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் சிலர் கருத்துத் தெரிவித்து இருக்கின்றனர். இந்த விதிமுறைகளைத் தற்போது மற்ற நிறுவனங்களும் பின்பற்ற வேண்டி வருமோ என்ற சந்தேகத்தையும் சில நிறுவனங்கள் எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.