கொரோனா தடுப்பூசி கிடைக்க இன்னும் 4, 5 ஆண்டுகள் ஆகுமா??? பீதியைக் கிளப்பும் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஷ்யா தான் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை நேற்றுமுன்தினம் மக்களின் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்ததாகப் பரபரப்பு தகவல் வெளியானது. அதையடுத்து இன்று ஐக்கிய அரபு அமீரகம் பரிசோதனையே செய்யப்படாத கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவல்களை எல்லாம் பார்க்கும்போது அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் எப்படியாவது உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இந்நிலையில் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க இன்னும் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் எனக் கூறி சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்தியாவில் செயல்படும் இந்நிறுவனம் உலகத்திலேயே அதிக அளவு மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கொரோனாவிற்கு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்ய இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா உலகில் உள்ள அனைவருக்கும் 2024 ஆம் ஆண்டின் இறுதி வரை தடுப்பூசி போடுவதற்கு போதுமான கொரோனா தடுப்பூசிகள் கிடைக்காது என எச்சரித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், “மருந்து நிறுவனங்கள் உற்பத்தி திறனை இன்னும் அதிகரிக்கவில்லை. இது உலக மக்களுக்கு குறைந்த நேரத்தில் தடுப்பூசி போடுவதற்கு போதுமானதாக இல்லை. கொரோனாவுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி தேவை என்றால் உலகம் முழுவதும் 1,500 கோடி தேவைப்படும். 35 தடுப்பூசிகள் சோதனையின் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இது உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
கொரோனா பாதிப்பு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் திறனை விட அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பூசிக்காக உலகம் நம்பிக்கையுடன் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் இப்போது தடுப்பூசி இறுதிக்கு அருகில் யாரும் வருவதை நான் கேள்விப்படவில்லை” என அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
புனேவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சீரம் நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதற்காக அஸ்ட்ராஜெனாகா மற்றும் நோவாக்ஸ் உள்ளிட்ட ஐந்து சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 100 கோடி டோஸ் அளவை உற்பத்தி செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் பாதி இந்தியாவிற்கு கொடுக்கவும் இந்நிறுவனம் உறுதி அளித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout