பீட்சா சாப்பிட பெண்களுக்குத் தடை… காரணத்தைக் கேட்டு ஆடிப்போன மக்கள்!
- IndiaGlitz, [Saturday,October 09 2021]
மத்திய கிழக்கு நாடான ஈரான் இஸ்லாமியக் குடியரசில் ஒளிப்பரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதில்ஒன்றுதான் பெண்கள் பீட்சா சாப்பிடுவது போன்ற காட்சிகளில் நடிக்கக்கூடாது என்பது. இதைத்தவிர இன்னும் சில கட்டுப்பாடுகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் விதிக்கப்பட்டு உள்ளன.
இஸ்லாமிய நாடான ஐஆர்ஐபி எனப்படும் ஈரான் இஸ்லாமிக் குடியரசு நாட்டில் உள்ள டிவி தொலைக்காட்சிகளில் பெண்கள் நடிக்கும்போது கைகளுக்கு கையுறை அணிந்துகொண்டுதான் நடிக்க வேண்டும். மேலும் சிவப்பு நிறத்தில் உள்ள எந்த பொருளையும் சாப்பிடுவது அல்லது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிடுவது போன்ற காட்சிகளில் நடிக்கக்கூடாது.
பெண்களுக்கு மட்டும்தான் இந்தக்கட்டுப்பாடுகளா? என்றால் ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள். ஆண்கள் பெண்களுக்கு காபி அல்லது டீ கொடுப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக்கூடாது. மேலும் பாலியல் உறவை தூண்டுவது போன்றிருக்கும் விளம்பரப் படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அவர்கள் மீது பொருளாதாரத்தடை விதிக்கப்படும்.
இத்தகைய விதிமுறைகளினால் டிவி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும் ஒளிப்பரப்புவதிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டு தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் நிகழ்ச்சிகளுக்கு வரும் சில பெண் விருந்தினர்களின் முகத்தைக்கூட காட்ட முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதுபோன்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் பெண்களை ஒடுக்கும் வகையில் அமைக்கப் பட்டிருப்பதுதான் சமூகநல ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.