'டாக்டர்' படத்திற்கு எதிராக திடீரென போராட்டம் செய்யும் பெண்கள் அமைப்பு: என்ன காரணம்?
- IndiaGlitz, [Monday,October 11 2021]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ’டாக்டர்’ திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படம் வெளியான முதல் நாளில் 7.45 கோடி தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தை ஷங்கர் உட்பட பல திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் விமர்சகர்களும் கொண்டாடி வருகின்றனர் என்பதும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென பெண்கள் அமைப்பு ’டாக்டர்’ படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ’டாக்டர்’ திரைப்படத்தில் விளையாட்டில் தோல்வி அடைந்த ஒருவருக்கு நைட்டி அணிந்து தலையில் பூ வைத்து பெண் போல மாற்றும் காட்சிக்கு தான் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் தோற்றவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்றால் பெண்கள் வேடம் தான் போட வேண்டுமா? பெண்கள் என்றால் அவ்வளவு கேவலமா? அந்த காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என பெண்கள் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து இயக்குனர் நெல்ச்ன் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.